சாராயக் கம்பனிகளிடமிருந்து பணம் பெறுவோரின் விபரங்களை சில தினங்களில் வெளிப்படுத்துவேன் - பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி - News View

About Us

Add+Banner

Friday, June 6, 2025

demo-image

சாராயக் கம்பனிகளிடமிருந்து பணம் பெறுவோரின் விபரங்களை சில தினங்களில் வெளிப்படுத்துவேன் - பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

1733388751-Sunil-Handunetti-
சாராய கம்பனிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் சில நபர்களின் பெயர், விபரங்கள் நிதி அமைச்சில் காணப்படுவதுடன் சில தினங்களில் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தப்போவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் நளின் பணடார மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகிய எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி. அது தொடர்பில் தெரிவிக்கையில், ”சீனி உற்பத்தி நிறுவனங்களின் நட்டத்தை நிவர்த்தி செய்வதற்காக ரூ. 475 இற்கும் விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் எத்தனோலை ரூ. 800 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

இதனால் பல இடைப் பிரச்சினைகள் தோன்றுகின்றன. குறிப்பாக எத்தனோல் விலையை அந்தளவு அதிகரிக்கும்போது சந்தையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கும். அவ்வாறு அதிகரிக்கப்படும்போது அதற்கு நிகராக நிச்சயமாக சட்டவிரோதமான மதுபானத்தின் உற்பத்தியும் அதிகரிக்கப்படும்.

அவ்வாறே உற்பத்தி அதிகரிக்கப்பட்டால், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வரி வருமானம் குறைவடையும். இதனால் எமது வருமான இலக்கை அடைந்துகொள்ள முடியாமல் போகிறது. அதனால் இந்த ஆபத்தான நிலைமையை சிந்தித்தே எத்தனோல் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், ”எத்தனோல் ஒரு லீட்டர் ரூ. 1500 இற்கு இருக்கும்போதும் சாராயம் ஒரு போத்தல் ரூ. 3500, 4000 இற்கே விற்பனை செய்யப்பட்டது. தற்போது எத்தனோல் ஒரு லீட்டர் ரூ. 475 இற்கு விற்பனை செய்யப்படும்போது சாராயத்தின் விலை குறையவில்லை. எத்தனோல் ஒரு லீட்டரில் 3 போத்தல் சாராயத்தை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால் சாராயம் ஒரு போத்தலை எந்தளவு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால் எத்தனோல் விலையை ரூ. 475 இருந்து ரூ. 800 வரை அதிகரிப்பதால், சாராய உற்பத்தியாளர்களுக்கு எந்த பிரச்சினையும் எற்படப்போவதில்லை.

அத்துடன் சட்டவிரோதமான மதுபானம் அருந்துபவர்கள் நாளொன்றுக்கு 2 இலட்சம் லீட்டர் பயன்படுத்துகின்றனர். இதனை நிறுத்துவதற்கே சீனி உற்பத்தி செய்கின்ற நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி, குறைந்த விலைக்கு சாராய போத்தல்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தேன்.

இது தொடர்பில் நான் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை வழங்குவேன். நிதியமைச்சில் இருப்பவர்களில் சாராய கம்பனிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் சில நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர், விபரங்களை சில தினங்களில் வெளிப்படுத்துவேன். அவர்களே இந்த விடயங்களை தடுத்து வருகின்றனர். அதனால் இதனை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த தொழிற்சாலையை முன்னேற்ற முடியாமல் போகும்” என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *