பிடிவாதம் காட்டும் இஸ்ரேல் : போர் நிறுத்த பேச்சை தொடர்வதில் ஹமாஸுக்கு சிக்கல் : ஊட்டச்சத்து மருந்தை பெற காத்திருந்தோர் மீதும் தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 10, 2025

பிடிவாதம் காட்டும் இஸ்ரேல் : போர் நிறுத்த பேச்சை தொடர்வதில் ஹமாஸுக்கு சிக்கல் : ஊட்டச்சத்து மருந்தை பெற காத்திருந்தோர் மீதும் தாக்குதல்

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் கட்டார் தலைநகர் டோஹாவில் இழுபறியுடன் நீடிக்கும் நிலையில் 10 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் அமைப்பு முன்வந்தபோதும், இஸ்ரேல் பிடிவாதம் காட்டுவதால் உடன்படிக்கை ஒன்றை எட்டுவது கடினமாக இருப்பதாக எச்சரித்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களுக்கு மத்திலேயே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. நேற்று காலை தொடக்கம் காசாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 55 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் விரைவில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில், காசாவில் உதவி விநியோகம், இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வாபஸ் பெறுவது மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான உண்மையான உத்தரவாதம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் முட்டுக்கட்டை நீடிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த திட்டத்திற்கு தமது அமைப்பு இணங்கி இருப்பதாக ஹமாஸ் அதிகாரி தஹர் அல் நுனு அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். 

‘எமது மக்களைப் பாதுகாக்கவும், இனப் படுகொலை குற்றத்தை நிறுத்தவும், போருக்கு முழுமையான முடிவை அடையும் வரை எமது மக்களுக்கு சுதந்திரமான மற்றும் கண்ணியமான உதவிகள் செல்வதை அனுமதிக்கும் வகையில் (உடன்படிக்கையில்) தேவையான நெகழ்வுப்போக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

அதேபோன்று முதல்கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் ஓர் அங்கமாக இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற வேண்டிய பகுதிகள் பலஸ்தீனர்களின் வாழ்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையிலும் வரையப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வொஷிங்டனில் ஒரு வாரத்தில் இரு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசிய டிரம்ப், காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

‘இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் எமக்கு வாய்ப்பு ஒன்று இருப்பதாக நான் நம்பிகிறேன். நிச்சமில்லை. போர் பற்றியும் காசா மற்றும் நாம் கையாண்டு வரும் மற்ற இடங்கள் பற்றியும் நிச்சயமாகக் கூற முடியாது’ என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 

‘ஆனால் இந்த வாரம் இல்லாவிட்டால் அடுத்த வாரத்தில் உடன்படிக்கை ஒன்றை எட்ட மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்றை நாம் பெற்றுள்ளோம்’ என்றும் அவர் கூறினார்.

என்றாலும் போர் நிறுத்தம் மற்றும் பயணக் கைதிகள் விடுதலைக்கான பேச்சுவார்த்தையை கண்டித்திருக்கும் இஸ்ரேலிய தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்மார் பென் கிவிஸ் அது ஹமாஸை வலுப்படுத்த மாத்திரமே உதவும் என்றார். 

‘இந்த பொறுப்பற்ற பேச்சுவார்த்தைகள் மேலும் தொடரும் அளவுக்கு ஹமாஸ் மீண்டும் வலுப்பெறுவதற்கு உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய காசாவில் மருத்துவ நிலை ஒன்றுக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் பத்து சிறுவர்கள் மற்றும் இரு பெண்கள் உட்பட குறைந்தது 16 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்குள்ள அல் அக்ஸா தியாகிகள் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

டெயிர் அல் பலாவில் ஊட்டச்சத்து மருந்துகளை பெறுவதற்கு மக்கள் வரிசையில் காத்திருந்தபோதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அந்த மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. 

காயங்களுக்கு உள்ளான சிறுவர்கள் சிகிச்சை பெறுவது மற்றும் கொல்லப்பட்ட சடலங்களை காட்டும் பயங்கரக் காட்சிகளைக் கொண்ட வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன.

அதேபோன்று தெற்கு காசாவில் உதவி விநியோக இடத்திற்கு அருகே காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் நேற்று பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கொல்லப்பட்டதாக நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சர்ச்சைக்குரிய உதவி விநியோக இடங்களில் இஸ்ரேலியப் படை தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் வட மேற்காக இஸ்ரேலியப் படை நேற்றுக் காலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதாக நாசர் மருத்துவமனை கூறியது. காசாவில் பல பகுதிகளிலும் இஸ்ரேலியப் படை தீவிர படை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment