பல்கலைக்கழகங்களில் பகிடிவதை : உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 9, 2025

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை : உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

(எம்.வை.எம்.சியாம்)

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கமைய குறித்த வழிகாட்டல் கோவையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி, தொழில்நுட்ப வசதிகளை பெற்றுக் கொடுக்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பகிடிவதை காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஸ்ரீ ஜயபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று (09) அறிவிக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் கல்வி பயின்ற பஷிந்து ஹிருஷான் டி சில்வா எனும் மாணவன் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு பல்கலைக்ககழக்கத்தின் வளாகத்தில் வைத்து காயங்களுக்குள்ளாயிருந்தார்.

அன்றையதினம் குறித்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் மூலம் படிக்கட்டில் இருந்து தள்ளி விடப்பட்ட பாரிய அளவிலான டயரொன்று (பெக்கோ இயந்திரத்துக்கு பொருத்தப்பட்டிருக்கும் டயர்) பஷிந்து ஹிருஷானின் தலையில் பட்டு அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவர் 3 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் பஷிந்து ஹிருஷான் பகிடிவதை காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதற்கமைய இந்த மனு மீதான நீண்ட விசாரணைகள் இடம்பெற்றதுடன் அதன் தீர்ப்பு இன்று (09) அறிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன பிரியந்த பெர்னாண்டோ மற்றும் யோஷித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கான தீர்ப்பை அளித்தது.

இதற்கமைய பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் குறித்த வழிகாட்டல் கோவையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி, தொழில்நுட்ப மற்றும் இதர வசதிகளை பெற்றுக் கொடுக்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்தான முன்னேற்ற அறிக்கை தொடர்பான விடயங்களை ஆராய இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்தது.

No comments:

Post a Comment