காசாவில் போர் நிறுத்த நம்பிக்கைக்கு மத்தியிலும் தாக்குதல்கள் உக்கிரம் : பலஸ்தீனர்களை வெளியேற்றுவதில் நெதன்யாகு தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 9, 2025

காசாவில் போர் நிறுத்த நம்பிக்கைக்கு மத்தியிலும் தாக்குதல்கள் உக்கிரம் : பலஸ்தீனர்களை வெளியேற்றுவதில் நெதன்யாகு தீவிரம்

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் கட்டாரில் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் இடம்பெறுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களிள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மறுபுறம் வடக்கு காசாவில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 5 இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பெயித் ஹனூனில் கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணி அளவில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்ரேலிய படையினர் மீது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த வீதியோர குண்டு ஒன்று வெடித்ததாக ‘டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 12 படையினர் காயமடைந்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணியின் பேச்சாளர் அபூ ஒபைதா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘வடக்கு தொடக்கம் தெற்கு காசா வரை எதிரிகள் மீது எமது போராளிகள் அழிவுப்போரை தொடுத்திருக்கும் நிலையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் மேலதிக இழப்புகளை எதிர்கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

காசாவுக்குள் நெதன்யாகு தமது படைகளை தொடர்ந்து நிலைநிறுத்த தீர்மானித்திருப்பது முட்டாள்தனமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் காசாவில் இஸ்ரேல் தனது உக்கிர தாக்குதல்களை இன்னும் குறைக்கவில்லை. நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 49 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 262 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் தாக்குதல்களிள் மொத்தம் 57,575 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 136,879 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு காசா நகரான கான் யூனிஸுக்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் பவாசி பகுதியில் கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம் காசாவில் போர் நிறுத்தம ஒன்றை எட்டுவது மற்றும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கு இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றபோதும் அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

என்றாலும் உடன்படிக்கை ஒன்றை எட்ட சில நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இஸ்ரேல் அமைச்சர் சீவ் எல்கின், இஸ்ரேலிய அரச ஒளிபரப்பு நிறுவனத்திற்கு கூறும்போது, ‘போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு கணிசமான வாய்ப்புகள் உள்ளன. சில முக்கிய விடயங்களில் மாற்றங்கள் செய்ய ஹமாஸ் விரும்புகிறது. அது சாதாரணமானதாக இல்லை. ஆனால் அதில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது’ என்றார். 

காசாவில் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக பணயக் கைதிகள் விடுப்பது மற்றும் 60 நாள் போர் நிறுத்த திட்டம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த போர் நிறுத்த முன்மொழிவை வரைவதில் முக்கிய பங்கு வகித்த டிரம்பின் பிரதிநிதியான ஸ்டீவ் விட்கொப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு கட்டார் பயணமாகவிருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் முன்வந்திருப்பதாக டிரம்ப் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். 

‘அவர்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறார்கள்’ என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.

இந்த போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில் காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் சர்ச்சைக்குரிய திட்டம் பற்றியும் நெதன்யாகு மற்றும் டிரம்ப் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் கடந்த திங்களன்று (07) இரவு விருந்தில் பங்கேற்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, பலஸ்தீனர்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை வழங்குவதற்கு மற்ற நாடுகளுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். 

காசாவில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

‘அவர்கள் தங்க விரும்பினால் அவர்களால் தங்க முடியும், ஆனால் அவர்கள் வெளியேற விரும்பினால் அவர்களுக்கு வெளியேற முடியுமாக இருக்க வேண்டும்’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

‘பலஸ்தீனர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க விரும்புவதாக அவர்கள் எப்போதும் சொல்வதை உணர முயற்சிக்கும் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். பல நாடுகளைக் கண்டுபிடிப்பதை நாங்கள் நெருங்கி வருகிறோம் என்று நினைக்கிறேன்’ என்றும் கூறினார்.

No comments:

Post a Comment