(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் வெறுமனே பாடப்புத்தக நிபுணர்களை மாத்திரமே நம்பியிருப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு அமெரிக்கா இலங்கை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் சிறந்த உதாரணமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரியை நிர்ணயித்து வெள்ளை மாளிகையிலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு குறைந்த வரிகளை நிர்ணயிக்க இலங்கை தவறியதற்கு பலவீனமான மற்றும் திறனற்ற பேச்சுவார்த்தைகளே காரணமாகும்.
இலங்கை ஏற்றுமதிகள் மீது 30 சதவீத அமெரிக்க வரி என்பது இந்த அரசாங்கத்தின் திறனற்ற பேச்சுவார்த்தைகளுக்கு நாம் செலுத்தும் விலையாகும்.
இந்த விவகாரத்தில் நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படாமைக்கான காரணம் அரசாங்கத்தின் உதாசீனமான நடவடிக்கைகளே ஆகும். இதனால் தற்போதுள்ள 3 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெறுமனே பாடப்புத்தக நிபுணர்களை மாத்திரமே நம்பியிருப்பதால் ஏற்பட்டுள்ள ஆபத்து அமெரிக்கா இலங்கை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் சிறந்த உதாரணமாகும் என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment