தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைமைப் பதவி வெற்றிடம் : ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா - News View

About Us

About Us

Breaking

Thursday, July 10, 2025

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைமைப் பதவி வெற்றிடம் : ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (RTI) தலைவரை நியமிப்பதில் நிலவும் காலதாமதம் குறித்து ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு இன்னும் முறையாகத் தலைவர் நியமிக்கப்படவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபயரத்ன 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவி விலகியதிலிருந்து இந்தப் பதவி வெற்றிடமாகவே உள்ளது. 

ஆணைக்குழுவின் செயற்பாட்டிலும், மக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாப்பதிலும் தலைவரின் பங்கு மிக முக்கியமானது என்பதால், இந்த நியமனத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இருந்தபோதிலும், நியமனத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேவையற்ற தாமதம் நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது உகந்த வினைத்திறனுடன் செயற்படவும், பல்வேறுபட்ட கருத்துக்களையும் நிபுணத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஐந்து ஆணையாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என தகவலறியும் உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. எனவே, தலைவர் உட்பட முழுமையான உறுப்பினர்களைக் கொண்டிருப்பது ஆணைக்குழுவுக்கு அத்தியாவசியமானது. 

மேன்முறையீடுகளை விசாரித்தல், குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து வழக்குத் தொடர்தல், ஆவண முகாமைத்துவம் மற்றும் முன்கூட்டிய தகவல்களை வெளியிடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குதல், சட்ட அமுலாக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விரிவான அதிகாரங்களையும் கடமைகளையும் கொண்ட ஊழல் எதிர்ப்பு சூழலியலில் மிக முக்கியமான சுயாதீன பொது நிறுவனங்களில் ஒன்றாக இந்த ஆணைக்குழு திகழ்கிறது.

தற்போது, ஆணைக்குழுவில் சட்டத்தரணி கிஷாலி பிண்டோ-ஜயவர்தன, சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, ஏ.எம். நஹியா மற்றும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் புதிதாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் டி.என். சமரகோன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இதன் மூலம் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் நால்வர் பதவியில் உள்ளனர்.

இந்தத் தாமதத்திற்கான காரணங்கள் பொதுவெளியில் அறியப்படாத அதேவேலை, ஆணைக்குழுவிற்கு மீதமுள்ள நியமனமாக தலைவர் நியமிக்கப்பட வேண்டிய நிலையில், சட்டத்தின் 12(2) ஆம் பிரிவின்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளவாறு, ஜனாதிபதிக்கு தனது பரிந்துரைகளைச் செய்யும்போது, ஏனைய தகைமைகளுடன், பொது வாழ்வில் தம்மை தனித்துவப்படுத்திக் காட்டிய நபர்களைப் பரிந்துரைக்குமாறு அரசியலமைப்புப் பேரவையை TISL வலியுறுத்துகிறது. 

சட்டத்தின் நோக்கத்திற்கேற்ப, பரந்த சமூகத்தில் அவர்களின் செயல்கள், பங்களிப்புகள் அல்லது சேவை மூலம் அங்கீகாரமும் மரியாதையும் பெற்ற தனிநபர்கள் அரசியலமைப்பு பேரவையால் பரிந்துரைக்கப்படுவது அத்தியாவசியம்.

TISL நிறுவனமானது, அமைச்சுசார், நிர்வாகம்சார் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் அண்மையில் இடம்பெற்ற நியமனங்கள் தொடர்பில் கவலை தெரிவிக்கிறது. 

இந்நியமனங்களில் நிலவும் ஒரு போக்காகக் கருதப்படும் விடயங்களானது, அரசியல் விசுவாசம், கூட்டுறவு மற்றும் வெளிப்புற நலன்களின் கலவையைப் பிரதிபலிப்பதாக தெரிகிறது. இது பெரும்பாலும் தகுதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை விலையாகக் கொடுத்து இடம்பெறுகிறது.

இந்த வெளித்தோற்றத்திலான நலன் முரண்பாட்டுப் போக்குகள், வலுவான நலன் முரண்பாட்டுப் பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கான மீள வலியுறுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

இத்தகைய போக்குகள், ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் பொதுமக்களின் நம்பிக்கையை அரிக்கக்கூடும். எனவே, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு, குறிப்பாகத் தலைவர் பதவிக்கு ஒரு புகழ்பெற்ற தனிநபரைப் பரிந்துரைக்கும்போது, பொது நலனில் ஆற்றிய சேவைகள், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதி ஆகியவற்றுக்கான அவரது செயல்களும் சேவைகளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 

தலைவர் இல்லாத நிலையில், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது கடமைகளைத் திறம்படச் செய்யவும், சுமூகமாகச் செயற்படவும், தடையின்றி இயங்குவதற்கும் உள்ள திறன் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது. ஆணைக்குழுவின் தொடர்ச்சியான செயல்பாடு, அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் தகவலறியும் உரிமைக்கான ஒரு அத்தியாவசியமான பாதுகாப்பாகும்.

எனவே, TISL நிறுவனமானது, ஜனாதிபதியையும் அரசியலமைப்புப் பேரவையையும், இலங்கையில் ஊழல் எதிர்ப்புக்கான உண்மையான அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில், மேலும் தாமதமின்றி ஆணைக்குழுவின் தலைவரை நியமிக்குமாறு கோருகிறது. 

முக்கியமாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளபடி, நியமிக்கப்படுபவர் பொது வாழ்வில் தம்மை தனித்துவப்படுத்திக் காட்டிய, நிரூபிக்கப்பட்ட அறிவு, அனுபவம் மற்றும் தொடர்புடைய துறைகளில் கேள்விக்கிடமற்ற மேன்மையைக் கொண்ட ஒரு தனிநபராக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். 

இந்த நியமனத்தின் தரம் மற்றும் நேர்மையில் சமரசம் செய்துகொள்வது, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் அர்த்தமுள்ள அமுலாக்கத்தில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

Athifa Thawzeer

No comments:

Post a Comment