ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக 13 வழக்குகள், தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட சன்ன விக்கிரமசிங்கவும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்குவோரில் அடங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த 13 வழக்குகளில் மூன்று வழக்குகள் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்பானவையாகும். இவர்கள், தமது செலவு அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கவில்லை என, தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் பிரசார நிதி விதிமுறைகளின் கீழ், தேர்தல் ஆணையத்திடம் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒன்று வேட்பாளரால், மற்றொன்று அரசியல் கட்சி அல்லது அவர்களது வேட்பு மனுவை முன்மொழிந்த நபராலே இவை,சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது, தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் பிரசாரத்துக்காக அதிகபட்சமாக ஒரு வாக்காளருக்கு ரூ.109 செலவழிக்க அனுமதிக்கப்படுகிறது.
செலவு வரம்பு வேட்பாளருக்கு 60% ஆகவும், அவர்களின் பிரச்சாரத்தை கையாளும் அரசியல் கட்சி அல்லது முன்மொழிபவருக்கு 40% ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment