முதல்வன் திரைப்பட பாணியில் பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள் - ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 15, 2025

முதல்வன் திரைப்பட பாணியில் பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள் - ரவிகரன் எம்.பி

தற்போது வட பகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்பட பாணியில் அந்த பொறுப்புக்களை ஒரு மாத காலத்திற்கு வட பகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 15.07.2025 இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.

இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்திய இழுவைப் படகுகள் எமது வட பகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களைச் சூறையாடிச் செல்கின்றன.

இந்த நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுக்க வேண்டிய கடற்படையினரும், ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாக காரணங்களை மாத்திரம் சொல்கின்ற நிலையே காணப்படுகின்றது.

இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு இந்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு கடற்படையினர் இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலைத் தடுப்பதற்கு டோறா படகுகள் வேண்டுமென காரணங்களை இங்கு கூறிக் கொண்டிருக்க முடியாது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகளுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்திய மீனவர்களுடைய இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் ஆதரவளிப்பதாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.

இந்த விடயத்தில் கடற்படையினர் மீது மீனவ மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.

இவ்வாறாக இந்திய மீனவர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி எமது மக்களை வறுமைக்குட்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் கடற்படையினருக்கு இருக்கின்றது.

எமது மக்களை காப்பற்ற முடியவில்லை எனில் எமது பகுதிகளில் படையினர் எதற்கு இருக்கின்றனர்.

படையினரால் இந்த அத்துமீறல் செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் எமது மக்களிடம் அந்தப் பொறுப்பினை வழங்குங்கள்.

கடற்படையினர் முள்ளிக்குளம் கிராமத்தையும் முற்றாக அபகரித்து வைத்துக் கொண்டு, அந்த கிராமத்திற்குரிய மக்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக இருக்கின்றனர். எமது மக்களுடைய வீடுகளையும் கடற்படையினர் அடாத்தாக கைப்பற்றி வைத்திருக்கின்றனர்.

கடற்படையினரால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சரைப்போன்று இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் எமது மீனவ மக்களிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள். 

எமது மீனவர்கள் இந்த அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவார்கள் என்றார்.

No comments:

Post a Comment