(செ.சுபதர்ஷனி)
அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதுடன் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் மருந்து பற்றாக்குறைக்கு மாற்றுத் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியிடங்களில் மருந்து கொள்வனவு செய்யும் முறை தொடர்பில் உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்க வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இதற்கு அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் இருப்பது அவசியம். எனினும் சமீப நாட்களாக அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்குவதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சுகாதார அமைச்சால் மருந்து விநியோகம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால் தற்போது மருந்து பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனினும் வைத்தியசாலையில் மருந்து பற்றாக்குறை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் சுகாதார அமைச்சின் புதிய திட்டத்துக்கமைய அவற்றை வெளியிடங்களில் கொள்வனவு செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் அண்மையில் அரச வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் மருத்துவ உபகரணங்களை வெளியிடங்களில் கொள்வனவு செய்தமைத் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வைத்தியர்கள் வெளியிடங்களில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய தயக்கம் தெரிவித்து வருகின்றனர்.
வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இன்மையால் இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளதுடன், ஒரு சில வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஆகையால் உடனடியாக மருந்து பற்றாக்குறைக்கு மாற்றுத் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியிடங்களில் மருந்து கொள்வனவு செய்யும் முறை தொடர்பில் உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment