(எம்.வை.எம்.சியாம்)
வீதி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைப்பதற்கு ‘Clean SriLanka’ திட்டத்தின் கீழ், திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இரண்டு மாதிரி விசேட போக்குவரத்துத் திட்டங்களை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பொருத்தமற்ற உதிரிபாகங்கள் நீக்கப்படுவதுடன், வீதி விதிமுறைகளை மீறி செயற்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்துக்கமைய வீதி விபத்துக்களையும் ,போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் வகையில் இரு விசேட போக்குவரத்து நடவடிக்கைககள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேடத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள விசேட ஒலி எழுப்பும் கருவிகள், கண்கவர் மின் விளக்குகள், பொருத்தமற்ற மற்றும் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய உதிரிபாகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இரண்டாவது கட்டமாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தி வீதி விதிமுறைகளை மீறி செயற்படும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையான இரு வாரங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸாரினால் சோதனை மேற்கொள்ளப்படும் என்பதுடன் இது தொடர்பில் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பொருத்தமற்ற உதிரிபாகங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் குறித்த நடைமுறையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல பொலிஸார் எதிர்பார்த்துள்ளதுடன் இந்த நடைமுறையை மீறி செயல்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய வகையில் வீதி விதிமுறைகளை பின்பற்றுமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே போக்குவரத்து முறைகேடுகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக முறைப்பாடளிக்க ஈ- ட்ரபிக் (e-traffic) எனும் கையடகத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படடுள்ளமையும் குறிப்பிடத்தாகும்.
No comments:
Post a Comment