இலங்கை பாராளுமன்றம் ஏனைய நாடுகளைப் போலவே, உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு ஆதரவான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகிறது. 2030 ஆம் ஆண்டு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் நாங்களும் ஒன்றிணைந்து இதனை அணுகி வருகின்றோம். அத்துடன் சமூகத்துடனான நெருங்கிய தன்மை காரணமாக இலங்கை பாராளுமன்றம் உலகின் ஏனைய பாராளுமன்றங்களை விட தனித்துவமானதாக காணப்படுகின்றது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாராளுமன்ற தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்று சர்வதேச பாராளுமன்ற தினமாகும். ஆண்டுதோறும் ஜூன் 30 ஆம் திகதி சர்வதேச பாராளுமன்ற தினத்தை கொண்டாடுவதற்கு ஏனைய நாடுகளை போன்று உலகின் பழைமையான ஜனநாயக நாடான இலங்கை இவ்வருடமும் அபிமானத்துடன் ஒன்றிணைகின்றது. அதுமட்டுமல்லாமல், 1931 இல் சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற நாடாக உலக வரலாற்றில் பதியப்பட்டுள்ள இலங்கை அந்த வாக்குரிமையை பயன்படுத்தி 1960 ஜூலை 21 ஆம் திகதி உலக அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை அதிகாரத்துக்கு கொண்டுவந்து மற்றுமொரு முற்போக்கான வரலாற்றை பதிவு செய்தது.
இலங்கை உள்ளிட்ட 179 நாடுகளை உள்ளடக்கிய 1889 இல் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து இவ்வருடமும் ஜூன் 30 ஆம் திகதி சர்வதேச பாராளுமன்ற தினத்தை இலங்கை கொண்டாடியது. தமது உறுப்பினர்களிடையே ஜனநாயக ஆட்சிமுறை, பொறுப்பு கூறுதல், ஒத்துழைப்பு, சட்டவாக்கத்தில் ஆண் பெண் சமநிலையை பேணுதல், இளைஞர் பங்கேற்பை வலுப்படுத்துதல் போன்ற நிலைபேறான விடயங்களை பேணுவதற்கு பங்களிப்பு செய்வது அந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாகும்.
பொதுமக்களின் வாக்குகளால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றமாகிய வலுவான நிறுவனம் இந்நாட்டின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நிலையான அடித்தளமாகும். மக்கள் பிரதிநிதிகளாக இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம். அதேபோன்று இலங்கை பாராளுமன்றம் இந்நாட்டின் சட்டமியற்றல், நிதி முகாமைத்துவம், மேற்பார்வை மற்றும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான நிறுவனமாகும்.
நீங்கள் தெரிவு செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, அரசியலமைப்பின் ஊடாக இந்நாட்டில் சட்டம் இயற்றுதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற அடிப்படை அதிகாரங்கள் சட்டவாக்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தற்போதைய கொவிட் 19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கு புதிய சட்டங்கள் தேவை என்று சுகாதார அமைச்சு கூறுகிறது, எனினும் அதன் வரைவு, செயல்முறை உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து அனுமதியளிப்பது சட்டமன்றத்தின் பணியாகும்.
விசாரணைகள் மற்றும் மேற்பார்வை என்பன தொடர்பில் பாராளுமன்றத்தில் அதிகளவு பணியாற்றுவது குழு முறைமை எனும் சிறிய பாராளுமன்றத்தை குறிப்பிடலாம். இது உலகம் முழுவதிலுமுள்ள பாராளுமன்றங்ககளால் பின்பற்றப்படும் வெற்றிகரமான முறையாகும். சட்டவாக்கத்துக்கு நீங்கள் தெரிவு செய்து அனுப்பும் பிரதிநிதிகள் இங்கு கட்சி பேதமின்றி கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர். அவர்கள் மாத்திரமல்லாமல் உரிய துறைசார் நிபுணர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, எமது பாராளுமன்றமும், ஏனைய நாடுகளைப் போலவே, உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு ஆதரவான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகிறது. உதாரணமாக, 2030 ஆம் ஆண்டு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் நாங்களும் ஒன்றிணைந்து இதனை அணுகுவதை குறிப்பிட்ட முடியும்.
சமூகத்துடனான நெருங்கிய தன்மை காரணமாக இலங்கை பாராளுமன்றம் உலகின் ஏனைய பாராளுமன்றங்களை விட தனித்துவமானதாக காணப்படுகின்றது. எனினும், எதிர்பாராத விதமாக முகங்கொடுத்துவரும் இந்த தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு, சுகாதார ஒழுங்குமுறைகளை கட்டாயம் பேண வேண்டிய இக்காலகட்டத்தில் ஏனைய நிறுவனங்களை போன்றே எமக்கும் சமூக இடைவெளியை பேணி செயற்படுவதற்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ஏனைய நாட்களை போன்றல்லாமல் இணையத்தை வினைத்திறனாக பயன்படுத்தி பாராளுமன்ற பணிகளை தொடர்ந்தும் தடைகள் இன்றி மேற்கொள்ள முடிந்தமை வெற்றியாகும்.
No comments:
Post a Comment