இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 22, 2025

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொயிசா மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ் கப்ரால் ஆகியோரால் ஜனாதிபதியிடம் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டன.

இலங்கையின் நிநி நிறுவனம் அல்லது வங்கியொன்று பெற்றுக்கொண்ட அதிகமான இலாபமாக இலங்கை வங்கி 106 பில்லியன்களை இலபமாக ஈட்டியுள்ளதென இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா இதன்போது தெரிவித்தார். 

இந்த இலாபம் வரி அறிவிப்புக்கு முன் பெற்றுக்கொண்டதென சுட்டிக்காட்டிய தலைவர்,வர்த்தக அபிவிருத்தி, சிறு மற்றும் மத்தியத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நிதி நிறுவனங்கள் வரிசையில் இலங்கை வங்கி முதன்மை நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த, தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால், 2023 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கி பெற்றுக்கொண்ட 4.2 பில்லியன் இலாபத்தை 2024 ஆம் ஆண்டில் 26.4 பில்லியன்களாக அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

தேசிய சேமிப்பு வங்கி இந்த வெற்றியை அடைந்துகொள்வதற்கு நாட்டில் காணப்படும் பொருளாதார ஸ்திரத்தன்மையும், நிதி ஒழுக்கமுமே காரணமாக அமைந்ததென சுட்டிக்காட்டிய ஹர்ஷ கப்ரால், அரச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கும் திறைசேரிக்கும் பாராமாக இல்லாமல் முறையான முகாமைத்துவத்தின் கீழ் இலாபத்தை ஈட்டும் நிலைக்கு மாற முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும் என்றும் தெரிவித்தார். 

2025 ஆம் ஆண்டிலும் இதனை மிஞ்சிய வெற்றியை அடைந்துகொள்ள தேசிய சேமிப்பு வங்கி எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இரு அரச வங்கிகள் என்ற வகையில் இலங்கை வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வெற்றியை பாராட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மூலோபாய தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் முறையான முகாமைத்துவத்தின் மூலம் அரச நிறுவனங்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னேற்றகரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், இந்த வங்கிகள் அடைந்திருக்கும் முன்னேற்றம் அதனை நன்றாக பிரதிபலிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டில் இலங்கை வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் தங்களது டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நுகர்வோர் சேவைகளை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

No comments:

Post a Comment