ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பல பிரபல ஆடைத் தொழில் முனைவர்கள் சத்தமில்லாமல் தம் தொழிற்சாலைகளை அயல் நாடுகளுக்கு கொண்டு போகிறார்கள். வேலை இழப்பு. உள்நாட்டில் பணபுழக்கம் குறைகிறது. நாளை மின்சார விலை உயர்வு வருகிறது. ஆனால், 2024ஆம் ஆண்டு இலாபம் காட்டிய மின்சார சபை இன்று எப்படி ஆறு மாதத்தில் நஷ்டம் என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை. 2024ஆம் ஆண்டு 5% மாக இருந்த பொருளாதார வளர்ச்சி, இவ்வருடம் 3.5% மாக இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியும், 3.4% என உலக வங்கியும் கூறுது. அடுத்த வருடம், இது 3.2% ஆக குறையலாம் என அதே ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுது. இதில் 2028ஆம் ஆண்டில் இருந்து வெளிநாட்டு கடன் தவணைகள் கட்டனும். இவை எதற்கும் அரசிடம் தீர்க்கமான தீர்வுகள் இல்லை. இனி ஒரு நெருக்கடி வருகிறதா? வந்தால் நாடு தாங்குமா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாட்டின் பொருளாதார சவால்கள் தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது, முதல் சம்பவம், தைத்த ஆடை ஏற்றுமதி துறைசார் ஆடைத் தொழிற்சாலை ஒன்று ஆயிரத்து நானூற்றுக்கு அதிகமான தொழிலாளரை (lay-off) விலத்தி விட்டார்கள். ஏற்கனவே பல பிரபல ஆடை தொழில் முனைவர்கள் சத்தம் இல்லாமல் தம் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கும், வியட்நாமுக்கும் கொண்டு போகிறார்கள்.
ட்ரம்ப் வரி விவகாரத்தின் பிரதிபலிப்பு இதுவாகும். அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. “ட்ரம்ப் நிர்வாகத்துடன் நாம் பேசி விட்டோம். இதோ, ஸ்ரீலங்கா-யூஎஸ் கூட்டு அறிக்கை வருகிறது” என அனுரவே சொன்னார். ஆனால், “அதெல்லாம் இல்லை. நூற்றுக்கணக்கான நாடுகளுடன் ஒவ்வொன்றாக கூட்டு-அறிக்கை வெளியிட முடியாது. இலங்கை அரசின் விளக்கம் பிழை,” என நான் கேட்டபோது யூஎஸ் தரப்பில் இருந்து விளக்கம் தந்தார்கள்.
இன்று வெளிநாட்டில் கடன் வாங்க முடியாத இலங்கை அரசு, என்ன செய்கிறது? பண வீக்கம் கூடும் என்பதால், ஐஎம்எப் நிபந்தனை காரணமாக பணத்தாள் அச்சடிக்கவும் முடியாது. இந்நிலையில், 2024 செப்டம்பர் முதல் டிசம்பர் வரைக்குள் மட்டும் உள்நாட்டு கடனாக திறைசேரி உண்டியல்கள் விற்று ரூ: 44,000 கோடி கடன் வாங்கி அரச ஊழியர் சம்பளம் மற்றும் செலவுகளை சமாளிக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா, சர்வதேச நாணய நிதி, உலக வங்கி போன்றவை தரும் நன்கொடை, குறை வட்டி அல்லது வட்டியில்லா கடன்கள் மட்டுமே.
உள்ளாட்சி தேர்தல் திருவிழா முடிவுக்கு வருகிறது. சந்தடி அடங்க, உண்மை பிரச்சினைகள் மேலே எழுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாத அரசு, அதே பழைய எதிர்க்கட்சி கால அரசியல் செய்து, அரச செலவுகளை குறைக்கிறோம், திருடர்களை பிடிக்கிறோம், என்று சொல்லி, சொல்லியே காலத்தை ஓட்டுகிறது. செலவுகளை குறைப்பது, திருடர்களை பிடிப்பது நல்ல விடயம்தான். நாம் ஆதரவளிக்கிறோம். ஆனால், அது மட்டும் அரசாங்கம் அல்ல என்று சொன்னால் இவர்களுக்கு விளங்குவது இல்லை.
ஜனாதிபதி தேர்தல், இந்த உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பெறுபேறு எப்படி இருந்தாலும், பாராளுமன்றத் தேர்தலில், ஆளுகின்ற அனுர அரசுக்கு தெளிவான மக்கள் ஆணை கிடைத்தது. ஆகவே அவர்கள்தான் நாட்டை தொடர்ந்து ஆள போகிறார்கள். ஆளவும் வேண்டும். ஆனால், பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் திருவிழா முடிவுக்கு வருகிறது. சந்தடி அடங்க, உண்மை பிரச்சினைகள் மேலே எழுகின்றன. இனி கட்சி அரசியல் சண்டைகளை நிறுத்தி விட்டு அரசும், எதிர்க்கட்சிகளும் இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment