உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முடிந்தால் ஒரு சபையில் ஆட்சியமைத்துக்காட்டுமாறு அரசாங்கமே எமக்கு சவால் விடுத்தது. அந்த சவாலை ஏற்றுக்கொண்டு செயற்படும்போது தற்போது அரசாங்கம் ஓலக்குரல் எழுப்பி வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பு மாநகர சபையில் சிதறிய துண்டுகளை சேர்த்துக்கொண்டு ஆட்சியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதி அமைச்சர் ஒருவர் இந்த சபையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் சிதறிய துண்டுகளை ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு அழைத்து வந்தது யார்? அவர்களின் வீடுகளுக்கு ஆள் அனுப்பி, குழுக்களில் தலைமை பதவி வழங்குவதாகவும் மாநகர சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்குமாறு தெரிவித்தது யார்? அரசாங்கம் தெரிவிக்கும் சிதறிய துண்டுகளையே ஜனாதிபதி தனது பெலவத்த கட்சி காரியாலயத்துக்கு அழைத்து ஆதரவை கோரி இருந்தார்.
அதேநேரம் எமது கொழும்பு மேயர் வேட்பாளர் அவர்களின் சிறிய பிள்ளையிடம் தோல்வியுற்றதாக குறித்த பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர் சிறிய பிள்ளை அல்ல. 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய். சிறிய பிள்ளை என்றால் 18 வயதுக்கு கீழ்ப்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் இந்த விடயத்திலும் பொய்யே பேசுகிறார்கள்.
ஆனால் கொழும்பில் சிறுமி ஒருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு எதிராகவும் குறித்த சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, உங்களது அமைப்பாளரின் நடவடிக்கையால் குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டிருந்தார். அந்த சிறிய பிள்ளை தொடர்பில் கதைப்பதில்லை.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு உள்ளூராட்சி மன்ற சட்டம் ஒன்று இருக்கிறது. அதாவது நூற்றுக்கு 50 வீதத்துக்கு அதிக வாக்குகளை பெறும் கட்சி ஆட்சியமைக்கலாம், அதில் எந்த பிரச்சினையும் இல்லை. 50 வீதத்துக்கு குறைவாக வாக்குகளை பெற்றிருந்தால் குறித்த மன்றத்தில் மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். அதுதான் சட்டம்.
அதன் பிரகாரம் அந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வருகிறது. அதில் என்ன தவறு? இதனை புரிந்துகொள்ளாமலே இவர்கள் எப்படியாவது கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதாக தெரிவித்து வந்தார்கள். ஆனால் தற்போது சட்டத்தை புரிந்துகொண்டு, ஜனாதிபதி ஏனையவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறார்.
இவர்களைத் தவிர அனைவரும் திருடர்கள் என்றார்கள். சுயாதீன குழுக்களில் போட்டியிடுபவர்களும் பிரதான கட்சிகளில் இருந்த திருடர்கள் என்றே இவர்கள் அன்று தெரிவித்தார்கள். தற்போது அவ்வாறு தெரிவிக்கவில்லை என குறிப்பிடுகின்றனர். இவர்களுக்கு சாப்பிட வேண்டும் என்றால் கபரகொயாவையும் உடும்பாக்கிக் கொள்ளும் நிலைப்பாட்டிலே இருக்கிறார்கள். ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாவிட்டால், ஏனையவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனையே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்தோம்.
2017 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட திருத்தம் மேற்கொள்ளும்போது, அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் என தெரிவித்திருந்தோம். ஆனால் அன்று எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி அந்த குழுவில் இருந்தார். இந்த திருத்தத்தை மேற்கொள்ள அவரும் ஆதரவளித்தார். இந்த முறைமை எதிர்க்கட்சிக்கு சாதகமாக இருப்பதால், அன்று ஜனாதிபதி இதற்கு ஆதரவளித்தார். தற்போது ஆளும் கட்சிக்கு வந்தபோது, இந்த சட்டத்தில் அநீதி இருப்பதை புரிந்துகொண்டு, சட்டத்தை திருத்த வேண்டும் என தெரிவிக்கிறார். இதுதான் இவர்களின் நிலைப்பாடு.
ஆட்சிக்கு வந்ததுடன் கட்சி மாறுவதற்கு எதிராக முதலாவதாக சட்டம் கொண்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டு வருகிறார். சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் நாங்கள் சவால் விடவில்லை. அரசாங்கமே எமக்கு சவால் விட்டது. தற்போது நாங்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு ஆட்சியமமைக்க முயற்சிகளை மேற்கொள்ளும்போது இவர்கள் ஓலக்குரல் விடுகின்றனர் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment