(எம்.மனோசித்ரா)
பாதாள உலகக் கும்பலுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் நேரடி தொடர்பிருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இது பாதாள உலகக் குழுவினர் ஊடாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பமா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சைக் குழுக்களை அழைத்து அவருக்கு சிறப்புரிமைகளை வழங்குவதாகக்கூறி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆதரவைக் கோரியிருக்கின்றார். இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் செய்யாத வெட்கப்படக்கூடியதொரு செயலையே தற்போதைய ஜனாதிபதி செய்திருக்கின்றார். முறையற்ற விதத்திலாவது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதே அரசாங்கத்தின் தேவையாகவுள்ளது.
கட்சிகளில் போட்டியிட முடியாத கள்வர்களே சுயேட்சைக் குழுக்களில் களமிறங்குகின்றனர் என தேசிய மக்கள் சக்தி கூறியது. கள்வர்களை கைது செய்வதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி, தற்போது கள்வர்களுடன் இணைந்தே ஆட்சியமைக்க முயற்சிக்கிறது. கள்வர்களோடு எவ்வாறு அரசாங்கம் ஆட்சியமைக்கப் போகிறது? தேசிய மக்கள் சக்தியிலும், ஜே.வி.பி.யிலும் காணப்பட்ட நேர்மை தற்போது முற்றாக காணாமல் போயுள்ளது.
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய கட்சிகள் எவை? அந்த கட்சிகளில் யார் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்பதை பகிரங்கமாகக் கூறுமாறு நாம் பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினோம். எனினும் சபாநாயகர் உட்பட ஆளுந்தரப்பு எம்.பி.க்களால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டது. இது மிகவும் பாரதூரமானதொரு கருத்தாகும்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என்பதே அரசாங்கத்தின் வாதம். நாம் ஆளுந்தரப்பின் குறைகளை சுட்டிக்காட்டும்போது பாராளுமன்றத்துக்கு வெளியில் எமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு கடிதம் மூலம் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏதேனுமொரு எதிர்க்கட்சி எம்.பி. கொல்லப்பட்டால் அந்த பழியை நேரடியாக பாதாள உலகக் குழுவின் மீது சுமத்த முடியும்.
எதிர்க்கட்சிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பிருப்பதாக கூறி, இரு தரப்புக்கும் இடையிலான மோதலே மரணத்துக்கு காரணம் என்று அரசாங்கம் தெரிவிக்கக்கூடும். பாதாள உலகக் குழுவினரால் எதிர்க்கட்சி எம்.பி.க்களில் யாராவது கொல்லப்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். பாதாள உலகக் குழுவினர் ஊடாக எதிர்க்கட்சி எம்.பி.க்களை கொல்வதற்கான ஆரம்பம் இதுவா என்ற சந்தேகம் எழுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்த சுயேட்சை குழு உறுப்பினர்களில் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர்களின் பிரதிநிதிகள் இருந்தனர். அவ்வாறெனில் அரசாங்கம் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனான பயணிக்கிறது? பாதாள உலகக் குழுவினருடனும், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைக்க முற்படுகிறது. இதன் ஊடாக எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என்றார்.
No comments:
Post a Comment