காஸாவில் மனிதப் படுகொலைகளிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கின்ற மற்றும் பொழுதுபோக்குகின்ற இடமாக இலங்கை மாறியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இதற்கான அனுமதியை வழங்கினார். இப்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இதே அனுமதியை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறார் என இராஜதந்திரியும், ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்றுமுன்தினம் (20) கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்தன கலாசார நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை துண்டித்தார். பலஸ்தீன விடுதலை அமைப்பு சுயாட்சியை பிரகடனப்படுத்தியபோது அதனை முதலில் அங்கீகரித்தவர்களில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் ஒருவர்.
ரணசிங்க பிரேமதாச ஆட்சியிலிருந்தபோது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக இலங்கை வாக்களித்தது. இதில் எதிர்த்த 25 நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். இவ்வாறு எதிர்த்த நாடுகளுள் பெரும்பாலானவை இஸ்லாமிய நாடுகளும் கம்யூனிச கட்சிகளால் ஆளப்பட்ட நாடுகளுமாகும். ஆனால் இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டு நின்று இதனை எதிர்த்தது இலங்கை மாத்திரம்தான்.
அதேபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பகிரங்கமாகவே பலஸ்தீனுக்கு ஆதரவாக உறுதியாக குரல் கொடுத்த ஒருவர் என்பதை நாம் அறிவோம். இவ்வாறுதான் இலங்கையின் வரலாற்றில் இஸ்ரேல் தொடர்பான நிலைப்பாடுகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்த இரு கட்சிகளாலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஆனால் இன்று என்ன நடக்கிறது?
இன்று காஸாவில் மனிதப் படுகொலைகளிலும், இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கின்ற மற்றும் பொழுதுபோக்குகின்ற இடமாக இலங்கை மாறியிருக்கிறது.
மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் அவரும் அப்போதைய அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இஸ்ரேலியர்கள் அறுகம்பையில் காலூன்ற அனுமதி வழங்கப்பட்டது. அதே நிலைப்பாட்டையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
யூதர்களே இல்லாத இலங்கையில் ‘சபாத் இல்லம்’ என்று அழைக்கப்படும் அவர்களது வணக்கவழிபாட்டு மற்றும் பிரசார நிலையங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. அவற்றுக்கு இலங்கையின் அரச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?
1970 கள் மற்றும் 80 களில் எவ்வாறு இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தைக் கையாண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அன்று எவ்வாறு செயற்பட்டார்கள்?
இன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் இந்த விவகாரத்தில் மிகவும் மெளனமாக இருக்கிறார்கள். பாராளுமன்றத்திலும் கூட அமைதியாகவே உள்ளார்கள்.
கடந்த தசாப்தங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது சமூகத்தின் வாக்குப்பலத்தின் ஊடாக அப்போதிருந்த அரசாங்கங்களுக்கு அழுத்தங்களை வழங்கினார்கள். இதனால் குறித்த அரசுகள் பலஸ்தீனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறான எந்த அழுத்தங்களும் வழங்கப்படுவதில்லை. அனைவரும் மெளனம் காக்கிறார்கள்.
இந்த நாட்டின் இஸ்ரேல் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமாயின் முதலில் முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து பலமான குரல்கள் எழுப்பப்பட வேண்டும். அதன் மூலமாக ஏனைய அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவைப் பெற வேண்டும். இதன் மூலமே பாரம்பரியமாக இலங்கை முன்னெடுத்து வரும் பலஸ்தீன ஒருமைப்பாட்டு நிலைப்பாட்டை பாதுகாக்க முடியும்.
அதுவே இந்த சந்தர்ப்பத்தில் பலஸ்தீனின் காஸா மக்களுக்கு மனிதாபிமான ரீதியாக நாம் வழங்கும் ஆதரவாக அமைய முடியும் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment