(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும்போது, தனிப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, அதிக சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கத் தகுதியுடையவர்களாவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளை நியமிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு எடுத்த முடிவை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தல் முறைமையின்படி, அரசியல் கட்சிகள் தங்கள் போனஸ் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை நியமிக்கலாம். இருப்பினும், வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமையளிக்க ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது.
கட்சியின் தலைமைத்துவம் இந்த நடவடிக்கையை உள்ளக ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், வாக்காளர்களின் விருப்பத்தை நியமனங்கள் பிரதிபலிப்பதை உறுதிசெய்வதற்கும் ஒரு படியாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment