விவாதத்துக்கான திகதியொன்று மே மாதம் 20ஆம் திகதிக்கு முன் வழங்கப்படாவிட்டால், இனிமேலும் விவாதம் பற்றி கிராமங்கள் தோறும் சென்று அங்குள்ள ஆரம்ப பாடசாலை மாணவர் மத்தியில் பிதற்ற வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசிய மக்கள் கட்சியின் நிறைவேற்று உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விவாதத்துக்கு பயந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் விவாதத்துக்கான திகதியை வழங்கவில்லையா? அல்லது சஜித் விவாதத்துக்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் பயப்படுகிறார்களா? என்பதை புரிந்து கொள்ள முடியாதென்றும் அவர் கூறினார்.
கண்டியில் நேற்றுமுன்தினம் (16) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே நலிந்த ஜயதிஸ்ஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, “மே 20ஆம் திகதிக்கு முன்னர் எந்த நாளிலேனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் அநுரகுமார திஸாநாயக்க விவாதம் நடத்தத்தயாரென தேசிய மக்கள் சக்தி கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்திக்கு எழுத்து மூலம் அறிவித்ததாகவும், தேவைப்பட்டால் அது தொடர்பில் முடிவெடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மே 20 க்கு முன் நான்கு நாட்களில் ஒரு திகதியை அறிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
எனினும் விவாதத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள போதும், அவர் விவாதத்தை தவிர்க்கிறார் என்பதையே அவர்களின் மௌனம் காட்டுகிறது” என்றார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பொருளாதார திட்டம் தொடர்பில் தமது உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் காணப்படுவதாகவும், மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு ஆதரவாகவும் ஏனையோர் அதற்கு எதிராகவும் இருப்பதாகவும் முன்னாள் எம்.பி. தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் வர விருப்பதால் வேட்பாளர்களுக்கு இடையில் விவாதம் நடத்துவதே முக்கியமானதெனவும் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் விவாதத்தை நடத்தாமல் ஓடிவந்து பாடசாலை மாணவர் முன்னிலையில் பிதற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment