நிறைவேற்றதிகாரத்தை காண்பித்து அச்சுறுத்தும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு நாம் அஞ்சப்போவதில்லை : சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 17, 2025

நிறைவேற்றதிகாரத்தை காண்பித்து அச்சுறுத்தும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு நாம் அஞ்சப்போவதில்லை : சுமந்திரன்

(நா.தனுஜா)

நிறைவேற்றதிகாரத்தை காண்பித்து அச்சுறுத்தும் ஜனாதிபதியின் மிரட்டலுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் ஜனநாயகவாதிகள். எனவே நாங்கள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுவோம். அதேபோன்று ஜனாதிபதியும் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். மாறாக மக்கள் விடுதலை முன்னணியாக அவர்கள் ஆயுதமேந்தி செயற்பட்ட காலத்துக்கு மீளத்திரும்பக்கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஏற்புடையதன்று எனவும், அதனை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும் நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறோம்.

அதன்படி குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெறப்படாவிடின், 29 ஆம் திகதியிலிருந்து நாம் பாரியதொரு போராட்டத்தை ஆரம்பிப்போம்.

இப்போராட்டம் எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. மாறாக தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்வதற்கான இப்போராட்டத்துக்கு எவ்வித பேதங்களுமின்றி சகல தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.

அதேவேளை அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த சபைகளின் ஆட்சியை தாம் கைப்பற்றி விடுவோம் என எச்சரிக்கும் தொனியில் கூறியிருப்பது மிகவும் துரதிஷ்டவசமான விடயமாகும்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தம்மிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நிறைவேற்றதிகாரமும் தம்மிடமே இருப்பதாக மிக மோசமானதொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தாரக மந்திரமாக இருந்தது. ஆனால் தற்போது அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தவுடன், அந்நிறைவேற்றதிகாரத்தைக் காண்பித்து பிறரை எச்சரிக்கிறார்.

ஜனாதிபதியின் இந்த மிரட்டலுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் ஜனநாயகவாதிகள். எனவே நாம் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுவோம். அதேபோன்று ஜனாதிபதியும் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கவேண்டும். மாறாக மக்கள் விடுதலை முன்னணியாக அவர்கள் ஆயுதமேந்தி செயற்பட்ட காலத்துக்கு மீளத்திரும்பக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment