அரசின் இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இரண்டு வார காலங்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது வழங்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை அவரது தடுப்புக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் ஒன்றால் அட்டொக் நகரில் உள்ள சிறை வளாகத்தில் நேற்று (30) இடம்பெற்ற விசாரணையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அனுப்பிய இரகசிய கேபிளின் உள்ளடக்கங்களை பகிரங்கப்படுத்தி, அதை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தியதாக முன்னாள் பிரதமர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“நாம் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்திருப்பதோடு எதிர்வரும் சனிக்கிழமை அது விசாரணைக்கு வரவுள்ளது” என்று இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் ஹைதர் பஞ்சுதா தெரிவித்தார்.
இம்ராக் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடைநிறுத்தி இருந்தது.
கடந்த 2022 ஏப்ரலில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானித்தின் மூலம் இம்ரான் கான் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வரை காபந்து அரசு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக 100 க்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment