சுஐப் எம். காசிம்
தனிப்பட்ட ஒருவரைக் குறிவைத்து ஒரு சமூகத்தையே குற்றவாளியாகக் காண்பிப்பதற்காக எடுக்கப்பட்ட சதிமுயற்சியின் தற்காலிக வெற்றியை தத்ரூபமாகப் படம் பிடித்துள்ள நூலிது. இந்த முயற்சி ஏன் எடுக்கப்பட்டது? இந்தச் சந்தேகத்திற்கான தெளிவை, இந்நூலில் கருத்துக்கள் நகர்த்தப்பட்டுள்ள பாங்கும் கையாளப்பட்டுள்ள மொழி ஓடலின் பாணியும் வாசகர்களுக்கு மிக எளிமையாக விளக்குகின்றன.
ஆட்சியதிகாரத்தை அடையும் வெறித்தனமே இந்த சதிமுயற்சியின் இயங்குமுறையாகும். ஒரு ஒழுங்குமுறையில் இந்த சதி இயக்கப்பட்டுள்ளதை நூலைப் பூரணமாகப் படிப்போர் புரிந்துகொள்ள முடியும். தேர்தலொன்றுக்கான திகதியை நெருங்கும் வரைக்கும் டொக்டர் ஷாபியின் வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு, சோடனை செய்யப்பட்டதும் இதற்காகத்தான். இந்த உண்மையை விவாதங்கள் அல்லது சந்தர்ப்பவாத சாட்சியங்களால் மூடி மறைக்க முயன்ற இனவாதம் இறுதியில் தோற்றேபோய்விட்டது.
காலத்தின் சாட்சிக்கு முன்னால், சகலரும் கை கட்டியவாறும் வாய் பொத்தியவாறும் நிற்க நேரிட்டுமுள்ளது. ஒருவகையில், இதுவே இறை நீதியாகிறது. அறிவுக்குப் புறம்பாகவும் கள யதார்த்தங்களை கைவிட்டவாறும் பின்னப்படும் சதிவலைகள், என்றோ ஒருநாள் நாலு பேரறியவும் நாடே சிரிக்குமாறும் நடுச்சந்தியில் கிழித்தெறியப்படும். இந்த உண்மைக்கு டொக்டர் ஷாபிக்கு எதிரான சோடனைச் சம்பவங்களே சாட்சி.
நிரந்தரமான நீதி கிடைக்கும் வரைக்குமான காலப்பகுதிக்குள் ஒரு நிரபராதி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவரது மனைவி, மக்கள், குடும்பம் உறவினர்களுக்கு ஏற்படும் சஞ்சலங்களை இந்நூலில் கற்க முடிந்தது. மட்டுமன்றி, மனக்கண்ணால் பார்க்கவும் புலனுணர்வுகளால் இவ்வேதனைகளை அனுபவிக்கவும் இந்நூல் எனக்குச் சந்தர்ப்பமளித்தது.
டொக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டடத்தை, கற்பனைகளால் கூட வர்ணிக்க இயலாதுள்ளது. விதியின் விளையாட்டுக்களிலிருந்து எவரும் தப்பிக்க முடியாதென்ற முடிவையும் இந்நூல் எடுத்தாள்கிறது. எனவே, நமக்கான விதிகள் இவ்வாறு விஸ்வரூபமாடாமலிருப்பதற்காக இறைவனை வேண்டியவாறே நாம் வாழப் பழகுவோம்.
தானென்றும் தம் பாடென்றும் வாழாமல், தமது வைத்தியத் தொழிலை மானிடத்துக்காக அர்ப்பணித்த மிகப்பெரிய மானிடவாதி டொக்டர் ஷாபி. துரதிஷ்டவசமாக இனவாதத்தின் நெருக்குவாரங்களுக்குள் கன கச்சிதமாகத் தள்ளப்பட்டிருக்கிறார். எவரதோ திருமண விருந்துக்காக, ஷாபியின் கடா அறுத்துப் பங்கிடப்பட்டதைப் போன்றதொரு சம்பவம்தான் இது. அதிகாரத்தையிழந்திருந்த ஏக்கமும் மீண்டும் அதே அரியணையில் ஏற வேண்டுமென்ற அரச குடும்பமொன்றின் வெறியும் ஈஸ்டர் தாக்குதலின் ஈனச் செயலுக்குப் பின்னாலிருந்த சதியின் நிழலில் டொக்டர் ஷாபியை நகர்த்தி நர வேட்டையாடியிருக்கிறது.
இனவாதம் இல்லாமலாகும் வரை இந்நிலைமைகள் எவருக்கும் ஏற்படலாம். எனவே, இனவாதத்தை இல்லாதொழிக்க சகலரையும் இணையும்படி ஷாபி விடுத்துள்ள அழைப்பில், அவரது தேசப்பற்றுக்கான ஒளிக்கீற்றுக்கள் தென்படுகின்றன. தொழில் மற்றும் நட்பு என்ற அடிப்படையில் ஏற்படும் உறவுகளில், சில விரிசல்களாகவும் முரண்பாடுகளாகவும் மாறுவதுண்டு. இதைச் சிலர் இனவாதத்தில் முதலிட்டு சுயலாபத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். டொக்டர் ஷாபிக்கும் இதுதான் நிகழ்ந்தது.
இல்லாததை இருப்பதாகக் காட்டவும் செய்யாததை செய்ததாக நிரூபிக்கவும் குருநாகல் வைத்தியசாலையின் சூழல், டொக்டர் ஷாபியின் எதிரிகளுக்கு தற்காலிகமாகக் கை கொடுத்த கதையைத்தான் இந்நூல் சொல்கிறது. நீதிபதியின் மனைவி இதே வைத்தியசாலையில் பணியாற்றியவர். குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நெருக்கமான உறவுகள் எனப் பலர், இந்த சூழ்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பாங்கிருக்கிறதே, இதை நினைக்கையில் பீதியால் எம் நெஞ்சங்கள் பிரமையடைந்துவிடும்.
நாலாம் மாடியில், 47 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளில் டொக்டர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகவில்லை. அவரை விடுவிப்பதைத் தவிர வேறு வழிகளில்லை என குற்றப்புலனாய்வுத் துறை கைவிரித்த போதும், மேலும் 14 நாட்கள் கேகாலைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்ட பின்னணியை பகிரங்கமாக எழுத இயலாத நிலையிருக்கிறது.
இது தவிர, இன்னும் ஏராளமானதைக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு பல சம்பவங்கள் இந்தச் சதி நாடகத்தில் நிகழ்ந்துள்ளன. எவ்வித குற்றமும் செய்யாத டொக்டர் ஷாபி, நாட்டின் பிரபல கேடிகளுடனும் குற்றவாளிகளுடனும் கைகளில் விலங்கிடப்பட்டு, கோர்வையாக சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அவரது மனைவியான இமாறா ஷாபி இதை நேரடியாகக் கண்டு கதிகலங்கிய கட்டத்தையும் இந்நூல் குறிப்பிடாமலில்லை. இத்தனைக்கும் இமாறா ஷாபியும் ஒரு டொக்டர். தன்னிலை மறந்து, சமூகத்தில் தமக்கிருக்கின்ற அந்தஸ்த்தை பொருட்படுத்தாது, படிப்பறிவற்ற பாமரப் பெண்போல நீதிமன்ற வளாகத்தில் ஓவெனக் கதறியழுதார். நிரபராதிக்கு ஏற்பட்ட நிலையை நினைத்ததால் ஏற்பட்ட நிர்க்கதி நிலையே இது.
காண்போரெல்லாம் குற்றவாளியான ஒரு கொடியவளைப்போல நோக்கும் நிலைமையும் வெறுப்புடன் வெறித்துப் பார்க்கும் கோபத்துடனுமேதான், இமாறா ஷாபியை தென்னிலங்கை நோக்கியிருந்தது. இதனால், தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாதவாறு சில பொறுப்புக்களைச் சுமக்க நேரிட்டது இமாறாவுக்கு. பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் சேர்ப்பதற்கு எடுத்த பிரயத்தனங்கள் மிகப் பரிதாபமானவை. மட்டுமல்ல, கொழும்பில் வீடொன்றை வாடகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட சிரமங்களை படிக்கின்றபோது, தனியாக நின்று ஒரு பெண்ணால் இத்தனையையும் சாதிக்க இயலுமா? என்ற ஆச்சர்யம் எவரையும் ஆட்கொண்டுவிடும்.
ஒரு பத்திரிகையின் பொறுப்பற்ற செய்தி ஏற்படுத்திய சித்துவிளையாட்டாக இதைக் கருத முடியாது. கிரிகெட் வர்ணனையைப் போன்று, அடிக்கடி டொக்டர் ஷாபியின் விவகாரங்களை ஊதிப் பெருப்பித்த சில ஊடகங்கள், ஒரு தேவைக்காக நாட்டை ஒரு கொதிநிலையில் வைத்திருந்தது. ஒருவகையில், ஊடகங்கள் சமூகத்தில் செலுத்தும் தாக்கத்தையும் இது வெளிப்படுத்துகிறது. மருந்துகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வெப்பநிலை மற்றும் குளிர்நிலை என்பவற்றின் சாதாரண அறிவையாவது தெரிந்திருப்பதில்லையா?கொத்து ரொட்டிக்குள் கர்ப்பத்தடையை ஏற்படுத்தும் மருந்துகளைக் கொட்டுவதாக வந்த வதந்திகளையும் சில ஊடகங்கள் நம்பவைத்துள்ளன. இதனால், பாதுகாப்பான சூழலைத் தேடி டொக்டர் ஷாபியின் குடும்பம் கிழக்கிற்குப் புலம்பெயர்ந்தது.
இது பற்றிக் கூறும் டொக்டர் ஷாபியின் மனைவி இப்படி விவரிக்கிறார். தெற்கில் சந்தேகக் கண்ணோடு நோக்கப்பட்ட எமது குடும்பம் கிழக்கில் சந்தோஷக் கண்ணோடு நோக்கப்பட்டது என்கிறார். சமூகம் ஒன்றின் பாதுகாப்பு, ஒட்டுமொத்தச் செறிவுடன் கூட்டாக வாழும் நிலையிலுள்ளது என்ற அரசியல் யதார்த்தத்தையும் எடுத்துச்சொல்கிறது. எட்டாயிரம் சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்து, சிங்கள சமூகத்தின் இனப்பெருக்கத்தை கருவறுக்கும் நோக்கில் டொக்டர் ஷாபி செயற்பட்டாரென்ற போலிச் சோடனைகள் பெற்றுக்கொண்ட தற்காலிக வெற்றிக்கு, நாட்டில் உள்ள இனவாதம்தான் காரணமென்று இந்நூல் இடித்துச் சொல்கிறது.
No comments:
Post a Comment