ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைச் சபையின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவின் தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் புலப்பட்டன.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த நட்டத்துக்கு பல காரணங்கள் இருப்பதாகவும், சில நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தாலும், உரிய கொடுப்பனவுகள் மோற்கொண்டில்லை என்பதும், சில நோயாளிகளிடமிருந்து அறவிட வேண்டிய கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமையும் புலப்படுவதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், விசேட சேவைகள் வழங்கப்பட்டாலும், அவற்றிலிருந்து வைத்தியசாலைக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது. அந்த விசேட சேவைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளன என்றும், அந்த விசேட சேவைகளுக்காக 2023 ஆம் ஆண்டில் முழு ஊழியர்களுக்கும் செலுத்தப்பட்ட தொழில்முறை கட்டணம் சுமார் 600 மில்லியன் ரூபாய் என்றும் இதன்போது குழு மேலும் சுட்டிக்காட்டியது.
மதகுருமார்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் முறைமை நடைமுறையில் உள்ளதாக கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஓய்வு பெற்ற வைத்தியசாலை ஊழியர்களுக்கும் 4,000 ரூபாய் எல்லையின் கீழ் சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய, இந்த முறையற்ற சூழ்நிலையை தவிர்ப்பதற்குத் தேவையான முறைமையை விரைவாகத் தயாரிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்தது.
அத்துடன், தேர்தல் காலத்தை நெருங்கிய நிலையில், அங்கீகரிக்கப்படாத பல பதவிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நியமனங்களுக்கு வழங்கப்பட்ட 35% சம்பள உயர்வும் சட்டவிரோதமானது என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
இந்த சட்டவிரோத நியமனங்களுக்கு அதிகரிப்புடன் கூடிய சம்பளம் வழங்கப்பட்ட போதிலும், சட்டரீதியாக நியமனம் வழங்கப்பட்ட "சலவை ஆய்வாளர்" பதவிக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புகளை புறக்கணித்த அனைத்து அதிகாரிகள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோப் குழு பரிந்துரைத்தது.
மேலும், அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோதமாக கட்டணங்கள் செலுத்தப்பட்டிருப்பது அவதானிக்கப்படுவதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களின் நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்குதல் ஆகியவை எந்த வகையிலும் மேற்பார்வைக்கு உட்பட்டில்லை என்றும் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, முழு செயல்முறை மற்றும் ஊழியர்கள் குறித்தும் முறையான விசாரணை நடத்தப்பட்டு 2 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்தது.
அத்துடன், பணிப்பாளர் சபைக்கு இலத்திரனியல் ஆவணங்கள் முகாமைக் கட்டமைப்பை செயற்படுத்தி நடாத்திச் செல்வதற்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்பந்தம், வைத்தியசாலை ஊழியர்களின் பணிப்பாளர் ஒருவரின் மனைவியை இயக்குநராகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை என்பதும், அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு முந்தைய தினமே நிறுவப்பட்டது என்பதும் வெளிப்பட்டது.
அத்துடன், ஒரு திட்டத்தின் கீழ் பணம் செலுத்தும் வாட்டுகளுக்கு 32 அங்குல 25 தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டிருந்தாலும், அதற்கு மாறாக, 43 அங்குல 25 தொலைக்காட்சிப் பெட்டிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. மேலும், 2025.04.30 ஆம் திகதி வரை இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் 06 தொலைக்காட்சிப் பெட்டிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக குழு சுட்டிக்காட்டியது.
இதற்கு மேலதிகமாக, வைத்தியசாலையின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை எதிர்வரும் காலத்தில் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார, எஸ்.எம். மரிக்கார், சமண்மலீ குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான, சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment