சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 3 ரூபா விலைக் குறைப்பு வழங்குவதாக Sinopec Lanka எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமது நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும் செயற்பாடுகளை ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இருந்த கொட்டாவ எரிபொருள் நிலையம் தற்போது Sinopec Lanka எண்ணெய் நிறுவனத்தின் கீழ் விற்பனை செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபானத்தின் கீழ் உள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் Sinopec நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன், மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை புதிதாக ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, 20 வருடங்களுக்கு இலங்கையின் எரிபொருள் சந்தையில் செயற்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சினோபெக் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் 'எமது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக இலங்கையில் எம்முடைய வணிக மற்றும் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
எவ்வித தடையுமின்றி சந்தைக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான கடப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment