பௌதீக ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட 30% முன்னேற்றத்துடன் ஒப்பிடுகையில் 5.44% முன்னேற்றம் மாத்திரமே எட்டப்பட்டிருந்த நிலையில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் ஏ செயற்றிட்டப் பொதியான பயணிகள் வருகைக் கட்டடம் மற்றும் இணைந்த வேலைகளுக்காக தைசி கோப்ரேஷன் நிறுவனத்திற்கு (Taisei Corporation) 37 பில்லியன் ரூபாவை வழங்கியிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது.
இலங்கையினுடைய வெளிவாரி அரச கடன் சேவை தொடர்பான இடைக்கால கொள்கை மீதான 2022 ஏப்ரல் 12ஆம் திகதிய சுற்றறிக்கை பிரகாரம், திட்டத்திற்கான கடன் தொகையில் கடன் தவணையை வெளியிடுவதை JICA நிறுவனம் இடைநிறுத்தியதாகவும், இதன் காரணமாக ஒப்பந்ததாரர் 2022 டிசம்பர் 09ஆம் திகதி கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட நஷ்டம் உள்ளடங்கலாக 37 பில்லியன் ரூபாவைச் செலுத்த வேண்டி ஏற்பட்டதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று வருடத்தைக் கொண்ட இந்தத் திட்டத்தில் இரண்டு வருட ஒப்பந்த காலம் பூர்த்தியடைந்துள்ள போதும் 5.44% முன்னேற்றத்திற்கு இந்தளவு தொகையை தைசி நிறுவனத்திற்கு வழங்கியமை எந்தளவுக்கு நியாயமானது என்றும் குழு கேள்வியெழுப்பியது.
மேலும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட பின்னர் அதற்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்காக தைசி நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்குவது குறித்தும், அந்த ஒப்பந்தத்திற்காக 1,328.7 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்படுவது குறித்தும் கோப் குழு கலந்துரையாடியது.
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட பின்னர், ஒப்பந்ததாரர் கொள்வனவு செய்த பொருட்கள் மற்றும் உபகரணங்களை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், இதில் 1,550 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இடைநிறுத்தப்பட்ட திட்டத்தின் ஒப்பந்ததாரர்களின் உள்நாட்டைச் சேர்ந்த துணை ஒப்பந்ததாரர்களின் தனியார் களஞ்சியங்களில் காணப்பட்டன.
அது தொடர்பில், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் தலைவரினால் ஒன்பது குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுக்களின் மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கு அமைய அவர்களிடமிருந்த incinerator இயந்திரத்தை வேறொரு களஞ்சியத்திற்குக் கொண்டு செல்வதால் மாதமொன்றிற்கு 392,904 ரூபாவை சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்த அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்தாமையினால் 3.9 மில்லியன் ரூபா மேலதிக களஞ்சிய செலவு ஏற்பட்டமை குறித்தும் கோப் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், மினுவொங்கொடை இரட்டை ஒழுங்கைகளைக் கொண்ட வீதியின் கட்டுமானப் பணிகள் குறித்தும் கோப் குழு கேள்வி எழுப்பியது. இந்த வீதியின் கட்டுமானம் பல மாடி வாகனத் தரிப்பிடக் கட்டுமானத்திற்கு இடையூறாக உள்ளது என்றும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் திட்டங்களில் பல வடிவமைப்பு மற்றும் கட்டுமான சிக்கல்கள் உள்ளன என்றும் குழு சுட்டிக்காட்டியது.
கோப் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, சந்திம ஹெட்டியாராச்சி, லெப்டினட் கமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment