போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக்கப்பட்டு குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, இலங்கையரின் சடலம் தொடர்பான மரண பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
பரிசோதனை ஆரம்பமானபோது, மரணமடைந்தவரின் மனைவியர் என தெரிவித்து மூவர் அங்கு வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து அங்கு குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. பின்னர், மரண பரிசோதனை மேலும் ஒரு தினத்திற்கு ஒத்திப்போடப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
போதைப் பொருள் குற்றத்திற்காக கடந்த (27) இலங்கையரொருவர் குவைத்தில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
இவரை, தமது கணவர் என உரிமை கொண்டாடிய மூன்று பெண்களுள் ஒருவர் ஓமானில் தொழில் புரிந்தவராவார். அவர் இதன்போது அங்கு சாட்சியமளிக்கையில், மரணமடைந்தவருடன் திருமணம் முடித்து 17 வருடங்கள் வாழ்ந்துள்ளதாகவும் இரு பிள்ளைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனது கணவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக மகன் எனக்குத் தெரிவித்தார். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதனை அறிந்ததும் நான் இலங்கைக்கு வருகை தந்தேன். அவரது சடலம் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது எனது கணவர் மேலும் இருவரை திருமணம் செய்திருந்ததாக என்னால் அறியமுடிந்தது.
நான் அவரது சடலத்தைப் பொறுப்பேற்க விரும்பவில்லை. எனினும் அவரது இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மனைவிகள் என்று கூறப்படும் பெண்களிடம் திருமணச் சான்றிதழ் மற்றும் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை பரிசீலித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment