இந்தியப் பிரதமர் நேற்றுமுன்தினம் (12) தனது உரையில் தெரிவித்த ஆத்திரமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் கூற்றுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில், இந்த அறிக்கை தவறான தகவல், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தை தெளிவாக புறக்கணிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு மிக மோசமான நடவடிக்கையாகும். மேலும் இந்த அறிக்கையானது, தவறான கதைகளைக் கட்டி, ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் போக்கைக் காட்டுகிறது.
சமீபத்திய போர் நிறுத்த உடன்படிக்கை புரிந்துணர்வு மூலம் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை நோக்கி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.பதற்றத்தைக் குறைப்பதற்கான வேண்டுகோளுடன் எங்களைத் தொடர்பு கொண்ட பல நட்பு நாடுகளின் உதவியின் விளைவாக இந்த போர் நிறுத்தம் எட்டப்பட்டது.” விரக்திக்கு” மத்தியில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விரும்புவதாகக் கூறுவது ஒரு அப்பட்டமான பொய்யாகும்.
இந்தியாவானது நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல், பாகிஸ்தானை களங்கப்படுத்தவும், ஒரு போலியான casus belli (போர்க்காரணம்) கற்பனை செய்து இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும், உள்நாட்டு அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவும், அதிகரித்து வரும் சமூக பிளவு பதட்டங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவும், இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை மறைக்கவும், ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட “நிரந்தர வெளி அச்சுறுத்தல்” கதையை வலுப்படுத்தவும் பஹல்காம் தாக்குதளை பயன்படுத்துகிறது.
பயங்கரவாதம் என்று பொய்யாக காரணம் காட்டி, அப்பாவி பாகிஸ்தான் பொதுமக்கள் மீது இந்தியா செய்த சட்டவிரோதமான தாக்குதலுக்குப் பிறகும், பாகிஸ்தான் பொறுமையை கடைப்பிடித்த நிலையிலும், இந்தியா மேலும் முரட்டுத்தனமாக நடந்து பாகிஸ்தானின் இராணுவ தளங்களை குறிவைத்தது. இது ஒரு கட்டுக்கடங்கா மோதலுக்கு வழிவகுத்தது.
இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கான செயல்கள் மிகவும் ஆபத்தானவை. இது முழு பிராந்தியத்தையும் பேரழிவின் விளிம்பிற்கு இழுத்துச் செல்கின்றன. இந்தியா எப்போதும் போரை தூண்டும் செயல்களை செய்கிறது. இதன் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், இந்தியா இப்பகுதியின் சமாதானத்தை குலைக்க முயற்சிக்கிறது. மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்தியா குற்றமற்ற அப்பாவி மக்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை சரியானது என்று சொல்கிறது. இப்படி அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதை இந்தியா “புதிய இயல்பு” என்று கூறுகிறது.
இந்தக் கூற்றை பாகிஸ்தான் முழுமையாக நிராகரிக்கிறது. ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் யாரும் சவால் விட முடியாது என்பதே ‘இயல்பான’ நிலை. பாகிஸ்தான் தனது இறையாண்மை, பிரதேச அஸ்திவாரம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதியாக காத்துள்ளதால் இது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள், வரும் நாட்களில் இந்தியாவின் செயல்களையும் நடத்தையையும் நாங்கள் கவனித்துக் கொண்டிருப்போம். சர்வதேச சமூகமும் இதேபோல் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
தற்காப்பு உரிமைக்கு ஏற்ப, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அளித்த பதில் தாக்குதலானது, சரியாக திட்டமிடப்பட்டு இராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்தது. இந்திய இராணுவ பலத்திற்கு எதிராக பாகிஸ்தான் தன் வலிமையை நிரூபித்துள்ளது. இது இப்போது எல்லோரும் அறிந்த உண்மையாகிவிட்டது. பொய்ப்பிரச்சாரம் மூலம் இதை மறுக்க முடியாது.
இந்தியா தனியாக எடுக்கும் சட்டவிரோதமான முடிவுகள், பல வருடங்களாக நீர் பகிர்வுக்கு வழிகாட்டிய சிந்து நீர் ஒப்பந்தத்தை வெளிப்படையாக புறக்கணிப்பதன் மூலமும் வெளிப்படையாகின்றன. இந்த உடன்படிக்கையில் உள்ள பாகிஸ்தானின் உரிமைகளை காப்பாற்ற நாம் தேவையான அனைத்தையும் செய்வோம்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு, மேலும் இந்தியா நேரடியாக இதை ஆதரிக்கிறது. இந்த பேரிடரால் நாங்கள் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தில் பாகிஸ்தானின் பங்களிப்புகளும் தியாகங்களும் அனைவரும் அறிந்ததே.
பாகிஸ்தான் எப்போதும் ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வை தேடுகிறது. இது ஐ.நா. விதிகளுக்கும் காஷ்மீர் மக்கள் விருப்பத்திற்கும் ஏற்ப இருக்க வேண்டும். தெற்காசியாவில் அமைதியின்மைக்கு காரணமாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் மீண்டும் ஆதரவு தெரிவிக்கிறோம்.
இந்த காலத்தில், அமைதிதான் உண்மையான பலம். உலகத்திற்கு பொய்யான இராணுவ ஆடம்பரமோ, பெருமை காட்டலோ தேவையில்லை. சிறந்த தலைமைத்துவம், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதிப்பது ஆகியவைதான் தேவைப்படுகிறது.
பாகிஸ்தான் ஒரு வலுவான சுதந்திர நாடு. எங்களிடம் உறுதியான அமைப்புகளும் அர்ப்பணிப்புள்ள மக்களும் உள்ளனர். உலகில் அமைதியை காப்பாற்ற எங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அமைதிக்கான நமது உறுதிப்பாட்டை ஒருபோதும் பலவீனமாக தவறாகக் கருதக்கூடாது. எதிர்காலத்தில் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம். இந்தியா தன் மக்களின் நலனையும் பிராந்திய அமைதியையுமே முக்கியமாக கருத வேண்டும், அரசியல் வெறியை அல்ல.
No comments:
Post a Comment