சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைக்கு எதற்காக அஞ்சுகிறீர்கள்? : வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைக்கு எதற்காக அஞ்சுகிறீர்கள்? : வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரகுமார்

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லையென நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்? என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவின் பிரம்டன் நிகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம், கடந்த 10 ஆம் திகதி அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்தின் பிரகாரம் இம்மாதம் 12 - 18 ஆம் திகதி வரையான ஒரு வார காலம் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை (14) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எவ்வித ஆதாரமும் அற்ற இனப் படுகொலைக் குற்றச்சாட்டு மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் என்பன தொடர்பில் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி சிக்கலாக்குவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லையென நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டு, அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏன் இடமளிக்கவில்லை எனவும் அவர் வினவியுள்ளார்.

மேலும் 'உண்மைக்கு அரசு அஞ்சுகிறது என்பதே யதார்த்தமாகும். உண்மையின் ஊடாக மாத்திரமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும். இருப்பினும் முன்னைய அரசாங்கங்களைப்போன்று உங்களது அரசாங்கமும் அதனைத் தொடர்ந்து நிராகரித்துவருகிறது' என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசனம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment