ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10 வீத வாக்குகளை அரசாங்கம் இழந்துள்ளது : நிறைவேற்றதிகார ஜனாதிபதி மாத்திரமே மாறாக சட்டத்துக்கு மேலானவர் அல்ல - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10 வீத வாக்குகளை அரசாங்கம் இழந்துள்ளது : நிறைவேற்றதிகார ஜனாதிபதி மாத்திரமே மாறாக சட்டத்துக்கு மேலானவர் அல்ல - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. சட்டத்தை மாற்றியேனும் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைப்பதை தடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை முற்றிலும் ஜனநாயக விரோதமான கருத்தாகும். அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி மாத்திரமே. மாறாக சட்டத்துக்கு மேலானவர் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எந்த வகையிலாவது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வோம் என்றவாறு ஆளுந்தரப்பு அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. அதற்கு சமாந்தரமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி.யின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோது, எதிர்க்கட்சிகள் சபைகளை அமைத்தால் சட்டத்தை மாற்றியேனும் அவற்றை கலைப்பதாகக் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன்னரும் அவர் இவ்வாறுதான் அச்சுறுத்தல் விடுத்தார். ஆனால் மக்கள் 23 இலட்சம் வாக்குகளை குறைத்திருக்கின்றனர். அதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். மக்கள் ஆணையை மீறும் வகையிலான கருத்துக்களையே தற்போது ஜனாதிபதி வெளியிட்டிருக்கின்றார். ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறியல்லவா ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர்? அவ்வாறெனில் இதுதான் ஜனநாயகமா?

உள்ளுராட்சி மன்றங்களுக்கென சட்டம் காணப்படுகிறது. அந்த சட்டத்தை மீறி அரசாங்கத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. பெரும்பான்மை இல்லாவிட்டால் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிகளுக்கு வாக்கெடுப்பின் மூலமே நியமனம் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் உரையை அவதானிக்கும்போது வாக்கெடுப்பின்றி தேசிய மக்கள் சக்தியினரை பதவிகளில் அமர்த்துவதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. தமக்கு ஏன் 23 இலட்சம் வாக்குகள் குறைவடைந்தன. ஆராய்ந்து மதிப்பிடுவதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தோற்றுப்போயுள்ளது.

ஜனாதிபதியின் தற்போதைய உரையின் மூலம் மேலும் 10 வீத வாக்குகள் இழக்கப்பட்டிருக்கின்றன. தான் சட்டத்திலும் மேலானவர் என்ற போக்கிலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. எதிர்க்கட்சியிலிருந்தபோது இந்த தேர்தல் முறைமையே சிறந்தது எனப் போற்றியவர்கள், இன்று அதனை ஏற்க மறுக்கின்றனர்.

முன்னர் இந்த தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என நாம் வலியுறுத்தியபோது, எதிர்க்கட்சிகள் தேர்தலை தாமதப்படுத்த முற்படுவதாகக் கூறினர். அன்று நாம் கூறியதை இன்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கம் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு முயன்றால் நாம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment