அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கில் விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதோடு நேற்று (15) காலை தொடக்கம் குறைந்தது 70 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் ஜபலியா நகரில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட சரமாரி வான் தாக்குதல்களிலேயே பெண்கள் மற்றும் சிறுவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பலரும் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘அவசர சிவில் மீட்புக் குழுக்கள் மற்றும் மீட்பாளர்களால் அடைய முடியாத நிலையில் கொல்லப்பட்ட பலரது உடல்கள் வீதிகளிலும் இடிபாடுகளிலும் தொடர்ந்த சிக்கி உள்ளன’ என்று காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு தலைவர் முஹமது சின்வார் மற்றும் மற்ற மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் ஊடகங்கள் நேற்று (14) செய்தி வெளியிட்டன.
இதன்போது காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய வைத்தியசாலைக்கு கீழுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பதுங்கு குழி ஒன்றை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் அல்லது ஹமாஸ் தரப்பிடம் இருந்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.
இஸ்ரேல் தாக்கிய ஐரோப்பிய வைத்தியசாலை பகுதிக்கு சென்ற புல்டோசர் ஒன்றையும் இஸ்ரேல் தாக்கியதாகவும் இதில் பலரும் காயமடைந்ததாகவும் பார்த்தவர் மற்றும் மருத்துவர் அதிகாரிகள் குறிப்பிட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஹமாஸின் கூட்டணியான ஈரான் ஆதரவு இஸ்லாமிய ஜிஹாத் போராட்ட அமைப்பு இஸ்ரேலை நோக்கி காசாவில் இருந்து ரொக்கெட் தாக்குதலை நடத்தியது. இதனை அடுத்து பதில் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் ஜபலியா நகர் மற்றும் அருகாமையில் உள்ள பெயித் லஹியாவில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது.
சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயமாக ட்ரம்ப் பிராந்தியத்திற்கு வந்திருப்பது வன்முறையை குறைக்க அழுத்தம் கொடுக்கும் என்று பலஸ்தீனர்கள் நம்பினர். உயிருடன் இருக்கும் கடைசி அமெரிக்கப் பணயக்கைதியான எடன் அலெக்சாண்டரை ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை விடுவித்தது.
ரியாதில் கடந்த செவ்வாயன்று பேசிய ட்ரம்ப் அலெக்சாண்டரின் விடுதலையை தொடர்ந்து எஞ்சிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் காசாவில் உள்ள மக்கள் சிறந்த எதிர்காலம் ஒன்றுக்கு தகுதி பெற்றவர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர் தனது மத்திய கிழக்கு விஜயத்தில் இஸ்ரேலுக்கு பயணிக்கவில்லை.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பரஸ்பரம் குற்றம்சாட்டிவரும் சூழலில் போர் நிறுத்த முயற்சிகளும் பின்னடைவை சந்தித்துள்ளன. அலெக்சாண்டரின் விடுதலை தொடர்பில் ஹமாஸ் அமைப்பு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் புதிய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் தனது பிரதிநிதிகளை கடந்த செவ்வாயன்று கட்டாருக்கு அனுப்பியது.
ட்ரம்பின் விசேட தூதுவர்களான ஸ்டீவ் விட்கொப் மற்றும் அடம் பொஹ்லர் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை டெல் அவிவில் பணயக்கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்தனர். அலெக்சாண்டர் விடுவிக்கப்பட்ட நிலையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு சிறந்த வாய்ப்பு ஒன்று ஏற்பட்டிருப்பதாகக் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தனியார் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்தி காசாவில் மனிதாபிமான உதவி விநியோகங்களை ஆரம்பிப்பதற்கு அமெரிக்கா திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் காசாவை முழுமையாக முடக்கி இருக்கும் இஸ்ரேல் இந்தத் திட்டத்திற்கு இணங்கியுள்ளது.
எனினும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்கள் இதனை நிராகரித்துள்ளன. இதில் உதவிக்கான நிதி மற்றும் நன்கொடையாளர் விபரம் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் தாக்குதல் நடத்தி 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்தே காசாவில் போர் வெடித்தது. அது தொடக்கம் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 5,900ஐ தாண்டி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு மேலாக காசாவுக்கு உதவி விநியோகங்கள் செல்லாத நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருப்பதோடு பஞ்ச அபாயம் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment