அரசாங்கம் செய்த தவறுக்கான சுமையை மின் பாவனையாளர்களான அப்பாவி மக்கள் மீது சுமத்துவதற்கு முற்படுவது நியாயமா ? - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

அரசாங்கம் செய்த தவறுக்கான சுமையை மின் பாவனையாளர்களான அப்பாவி மக்கள் மீது சுமத்துவதற்கு முற்படுவது நியாயமா ? - விமல் வீரவன்ச

(எம்.மனோசித்ரா)

இலங்கை மின்சார சபையின் ஊழல், மோசடிகளை ஒழிப்பதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களிடம் மண்டியிட்டதால்தான் மின் உற்பத்தி செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடு செய்வதற்கு மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய ஜூனில் மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அடுத்த மாதம் மின் கட்டணத்தை 25 - 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. செலவை சமநிலைப்படுத்தும் வகையில் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. செலவு எவ்வாறு அதிகரித்தது? இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் 2024ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 141 பில்லியன் ரூபா இலாபமீட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில் 7 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் எவ்வாறு மின்சார சபை நஷ்டத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தது?

சூரிய சக்தி மின் உற்பத்தியை பலவீனமடையச் செய்து, நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களின் தேவைக்காகவே அண்மைக்காலமாக இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்டோர் செயற்பட்டனர். மின்சார சபையில் ஊழலை ஒழிப்பதாகக் கூறியவர்கள் அதற்காக எடுத்துள்ள நடவடிக்கை இதுதானா?

அரசாங்கம் அதன் மாபியாவை மறைப்பதற்காக தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் மீது பழியை சுமத்தியிருக்கிறது. அரசாங்கம் செய்த தவறுக்கான சுமையை மின் பாவனையாளர்களான அப்பாவி மக்கள் மீது சுமத்துவதற்கு முற்படுவது நியாயமானதா.?

30 சதவீதத்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் நாட்டின் தொழிற்துறைகள் பல முடங்கும் அபாயம் ஏற்படும். தற்போதுள்ள மின்சார சபை சட்டத்தின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் இலங்கையின் மின்சக்தி துறையை கட்டுப்படுத்துவதற்கான சூழலையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க முயல்கிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இது பொறுமையாக இருக்க வேண்டிய சந்தர்ப்பம் அல்ல.

ஊழல் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி நிலக்கரி, டீசல் மாபியாக்களிடம் மண்டியிட்டுள்ள அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு மக்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவைய இல்லை. மாறாக மக்கள் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காவிட்டால் 30 சதவீதம் மாத்திரமின்றி மேலும் 30 சதவீத அதிகரிப்பையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றார்.

No comments:

Post a Comment