பொத்துவில் ஹிஜ்ரா நகர் (ஜெய்க்கா வீட்டுத் திட்டம்), சிரியா கிராமம், ரொட்டை கிராமம் ஆகிய பிரதேசங்களில் அண்மையில் யானை - மனித மோதல் அதிகரித்திருந்த நிலையில், ஹிஜ்ரா நகர் வீட்டுத் திட்டத்தில் யானைகளால் பெரும் சேதங்களும் ஏற்பட்டன.
இது பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த 28.03.2023 அன்று ஹிஜ்ரா நகர் பல்தேவைக் கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பினால் குறித்த பிரதேச வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்டோரை அழைத்து கூட்டம் கூட்டப்பட்டு இம்மக்களின் பாதிகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், யானை பாதுகாப்பு சிவில் சமூக குழு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பினால் குறித்த பிரதேசத்தில் யானை வேலி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.
அந்த வகையில் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரோடும் அமைச்சரோடும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் நேரில் சென்று யானை வேலி அமைப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், நேற்று (2023.05.16) குறித்த பிரதேசத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு வருகை தந்த அம்பாறை - மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர்கள் அப்பிரதேசத்தில் யானை வேலிகள் அமைப்பதற்கான இடங்கள் அனையாளப்படுத்தப்பட்டன.
கூடிய விரைவில் அனையாளப்படுத்தப்பட்ட இடங்கள் உள்ளிட்ட தரவுகள் அமைச்சுக்கு அனுப்பப்பட்டு விரைவில் யானை வேலிகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அப்பிரதேசங்களில் அண்மை காலங்களில் திருடர்களின் நடமாட்டம் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக சொல்லப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கே பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வரவழைக்கப்பட்டு, சிவில் பாதுகாப்பு குழு தெரிவு செய்யப்பட்டதோடு குறித்த பிரதேசத்தில் காவலரண் அமைக்கப்பட்டு பொலிஸார், வனஜீவராசி உத்தியோகத்தர்கள் ஆகியோர் நிரந்தரமாக இருந்து மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்போது அங்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் இத்தகைய மக்கள் - அரசியல்வாதி - அரச ஊழியர்களுக்கிடையான தொடர்பாடல் கட்டமைப்பை பாராட்டியதோடு, ஏனைய பிரதேசங்களுக்கும் யானை - மனித மோதலை கட்டுப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் இத்தகைய நடவடிக்கை ஓர் எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல்கள், கள விஜயங்களின்போது பாராளுமன்ற உறுப்பினரோடு ஹிஜ்ரா நகர் - ஹிதாயபுர பிரதேச பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யூசுப் முகைதீன் மக்கள் சார்பில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment