(எம்.மனோசித்ரா)
நாட்டில் இணையவழியூடான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகளால் 30 - 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு இணையவழி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கணணி குற்ற விசாரணைப்பிரிவு தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதோடு, அவை தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு இரு பிரத்தியேக மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு மார்ச்சில் கணணி குற்ற விசாரணைப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த பிரிவிற்கு கடந்த ஆண்டில் மாத்திரம் 2500 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, எனினும் தற்போது நிலைமை அதனை விட அதிகரித்துள்ளது.
நாளாந்தம் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன, இலங்கையில் இடம்பெறும் இணைய குற்றங்களில் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களின் புகைப்படங்களில் அவர்களின் முகத்தோடு வேறு நிர்வாண உடல் புகைப்படத்தினை இணைத்து இணையத்தில் வெளியிடுகின்றமை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதே போன்று யுவதிகள் இளைஞர்களுடன் காதல் கொண்டுள்ள சந்தர்ப்பங்களில் அல்லது நண்பர்களாக இருந்த சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்த யுவதிகளின் திருமணத்தின் போது இணையத்தளங்களில் வெளியிடப்படுகின்றமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மேலும் பிறந்தநாள் அல்லது ஏதேனுமொரு விசேட தினங்களில் பரிசுப் பொதி கிடைத்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக் கொள்ள பணத்தை வைப்பிலிடுமாறும் தெரிவித்து பல மோடிகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறான மோசடிகளில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள 30 - 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே பெருமளவில் ஏமாறுகின்றனர்.
நைஜீரியா உள்ளிட்ட நாட்டு பிரஜைகளே இவ்வாறு அதிகளவில் மோசடிகளில் ஈடுபடுகின்றனர், எனினும் அவர்கள் தம்மை பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களைப் போன்று காண்பித்துக் கொள்கின்றனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கையிலுள்ள பெண்களைத் தொடர்புகொள்ளும் நபர்கள் தனது மனைவி இறந்துவிட்டதாகவும், இவர்களை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றனர்.
அதன் பின்னர் பரிசுப் பொதிகளை அனுப்பியுள்ளதாகவும், பரிசுப் பொதிகள் விமான நிலையத்தில் அல்லது வேறு இடங்களில் கிடைத்துள்ளதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ள பணத்தை வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும் தெரிவிக்கப்பட்டு மோசடிகள் இடம்பெறுகின்றன. அது மாத்திரமின்றி சமூக வலைத்தள கணக்குகள் , மின்னஞ்சல் என்பவற்றை ஊடுருவல் என்பனவும் அதிகளவில் இடம்பெறுகின்றன.
கணணி குற்ற விசாரணைப் பிரிவினரால் இதனுடன் தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அத்தோடு dir.ccid@police.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாக முறைப்பாடளிக்க முடியும். மேலும் போலி முகநூல் கணக்குகள் என்பவை தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு report@cid.police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான இணை குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு 3 வருட சிறைத் தண்டனை வழங்க முடியும். கணணி ஊடுருவல்கள் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களை பகிர்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக மதங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்துபவர்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment