(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் ஐ.ஓ.சி எண்ணெய் நிறுவனம் எரிபொருளின் விலையை அதிரகரித்துள்ளமை உள்ளிட்ட காரணிகளினால் பஸ் கட்டண அதிகரிப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம். பஸ் கட்டணத்தை அதிகரிக்காவிடின் குறுந்தூர போக்குவரத்து சேவையில் தனியார் பஸ்கள் ஈடுபடுத்தப்படுவது மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலையேற்றததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் 17 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. குறைந்தபட்ச பஸ் கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் எவ்வித இலாபத்தையும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
ஐ.ஓ.சி. எண்ணெய் நிறுவம் இம்மாதத்தில் மாத்திரம் இரண்டு முறை எரிபொருள் விலையை அதிகரித்ததால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தினோம்.
எதிர்வரும் ஜூலை மாதம் வரை எக்காரணிகளுக்காகவும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றன காரணத்தினால் 250 தனியார் பஸ்கள் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியுள்ளன. இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் ஐ.ஓ.சி.நிறுவனம் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சு ஒன்று எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். இவ்விரு தீர்மானங்களில் ஒன்றை செயற்படுத்தாவிடின் குறுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment