(எம்.மனோசித்ரா)
தேசிய போர் வீரர் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்காமல் இருப்பதற்கு திட்டமிட்டிருந்தாரா? நிகழ்வுக்கான அழைப்பிதழில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பெயர் பிரதம அதிதி எனக் குறிப்பிட்டிருந்தமைக்கான காரணம் என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் நடைபெற்ற போர் வீரர் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார். ஆனால், அழைப்பிதழில் ஜனாதிபதிக்கு பதிலாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் பிரதம விருந்தினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் அழைப்பிதழில் ஜனாதிபதியின் பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை?
அவ்வாறெனில் அமைச்சர் விஜித ஹேரத் கூறியது பொய்யா? அவர் கூறியதைப் போன்று ஜனாதிபதி ஏற்கனவே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தால், அவரது பெயர் ஏன் பிரதம விருந்தினராக அச்சிடப்படவில்லை?
எதிர்க்கட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த குழப்பம் ஏற்பட்டது. ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்ததன் காரணமாகவே அவர் இறுதி நேரத்தில் அந்த நிகழ்வில் பங்கேற்றார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இந்த குழப்பத்திற்கு அதிகாரி ஒருவரின் தவறான தகவல் தொடர்பு காரணம் என்றும், அது அடையாளம் காணப்பட்டவுடன் சரி செய்யப்பட்டதாகவும் கூறினார். ஆனால், அது உண்மையல்ல என்றார்.
No comments:
Post a Comment