எனது பாராளுமன்ற ஆசனத்தை கைவிடுகிறேன், அதற்குப் பதிலாக ரஞ்சனை விடுதலை செய்யுமாறு கோருகின்றேன் : அறுபது வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன் - ஹரீன் பெர்னாண்டோ - News View

About Us

Add+Banner

Tuesday, November 2, 2021

demo-image

எனது பாராளுமன்ற ஆசனத்தை கைவிடுகிறேன், அதற்குப் பதிலாக ரஞ்சனை விடுதலை செய்யுமாறு கோருகின்றேன் : அறுபது வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன் - ஹரீன் பெர்னாண்டோ

.com/img/a/
(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வத்தளை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, '60 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்' என்று உத்தரவாதமளிக்கும் சான்றுப்பத்திரத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் காலத்தில் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை ஆசனத்தின் ஊடாக பசில் ராஜபக்ஷவிற்கு சவாலாகத் தேர்தலில் களமிறங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் வத்தளை தொகுதி அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கழமை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர், தான் 60 வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த உத்தரவாதத்தை அளிக்கும் சான்றுப்பத்திரத்தை ஹரீன் பெர்னாண்டோ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ மேலும் கூறியதாவது, பொதுவாக நவம்பர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் எந்தவொரு நற்காரியங்களிலும் ஈடுபடுவதில்லை. இற்றைக்கு (நேற்று) ஒரு மாத காலத்திற்கு முன்னர்தான் நான் சுமார் பத்து மணி நேர இருதய சத்திர சிகிச்சையொன்றுக்கு முகங்கொடுத்தேன்.

இருப்பினும் நான் வத்தளை ஆசனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்று பல்வேறு கருத்துக்கள் வெளியாகும் சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பிறந்ததினமான இன்று (நேற்று) வத்தளை ஆசனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்வது பொருத்தமானதாக அமையும் என்று கருதினேன்.

அதுமாத்திரமன்றி தொடர்ந்து நீண்ட காலம் அரசியலில் இருக்கின்ற பாரம்பரியத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகின்றேன். குறிப்பிட்ட வயதெல்லைக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பை வழங்கும் போக்கு உருவாக வேண்டும்.

28 வயதில் அரசியலுக்குள் பிரவேசித்த என்னால் 60 வயதைக் கடந்த பின்னர் எதனையும் செய்ய முடியாது. எனவே நான் 60 வயதுடன் அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதற்குத் தீரமானித்திருக்கும் அதேவேளை எஞ்சியுள்ள 18 வருடங்களில் எமது கட்சியின் சார்பில் வத்தளை தொகுதியிலிருந்து மேலும் பல இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்கின்றேன்.

அதேவேளை ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றையும் முன்வைக்க விரும்புகின்றேன். தேசியப்பட்டியல் மூலமான எனது பாராளுமன்ற ஆசனத்தைக் கைவிடுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அதற்குப் பதிலாக ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.

ஏனெனில் மக்களை முன்னிறுத்திய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகிக் கொண்டால், கட்சித் தலைவரும் பொதுச் செயலாளரும் இணைந்து அவ்வெற்றிடத்திற்குப் பிறிதொருவரை நியமிக்கலாம்.

குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்க அந்தப் பதவிக்குத் தகுதியற்றவர் என்று யாரும் கூற மாட்டார்கள். என்னால் வீதிகளில் இறங்கிப்போராட முடியும். ஆனால் ரஞ்சன் ராமநாயக்க நிச்சயமாகப் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய ஒருவராவார்.

மேலும் பதுளை மாவட்ட மக்களுடனான கோபத்தினாலோ அல்லது முரண்பாட்டினாலோ நான் இப்போது கம்பஹா மாவட்டத்திற்கு வரவில்லை. மாறாக ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டத்தின் ஊடாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே கம்பஹாவிற்கு வந்திருக்கின்றேன். அதற்காக நான் பதுளை மக்களை மறந்துவிட்டேன் என்று கருதுவது தவறாகும். அதேவேளை ஏற்கனவே சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட நான், எதிர்வரும் காலத்தில் பசில் ராஜபக்ஷவிற்குச் சவாலாகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *