இலங்கையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றி - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

இலங்கையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றி - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)

உலகளாவிய ரீதியில் சில நாடுகளில் மாத்திரமே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இலங்கையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும். உலகில் ஓரிரு நாடுகளில் மாத்திரமே இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் முழு சனத் தொகையில் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ளன.

விசேட தேவையுடைய சிறுவர்கள் 12, 15, 18 மற்றும் 19 வயதுகளையுடைய மாணவர்களுக்கும் தடுப்பூசியை வழங்கி உயர்தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலை மட்டத்தில் சகல மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்மாதம் முதலாம் திகதி முதல் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நிச்சயம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமையளிக்கப்படும் குழுக்களாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர், சுற்றுலாத்துறையினர் உள்ளிட்டோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த குழுக்களுக்கு அவர்கள் சார்ந்த துறையினர் ஊடாகவே தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு இந்த தரப்பினர் ஊடாக தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment