பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Friday, May 16, 2025

பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர் - சஜித் பிரேமதாச

பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டில் பலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது. பலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை இழந்த, பாலஸ்தீன தாயகத்தின் அழிவின் ஆரம்பத்தை இந்நாள் குறிக்கிறது.

இதன் பிரகாரம், இலங்கைக்கான பலஸ்தீன தூதரகமும் பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவும் இணைந்து நேற்று (15) மாலை கொழும்பில் நடத்திய 75ஆவது நக்பா தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கடந்த காலங்களில் பல சர்வதேச வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது வெறுமனே கதைக்கு மட்டும் சுருங்கி, செயல் சார்ந்து பலவீனமான கட்டத்திற்கு வந்திருக்கும் பொழுதில், ஒரு நாடு என்ற வகையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீன மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, மத மற்றும் வாழும் உரிமைகளுக்காக நாங்கள் முன்நிற்கிறோம்.

அதேபோல், பலஸ்தீன மக்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தங்கள் தாயகத்தை இழக்கும் பல சவால்களை எதிர்கொண்டனர். அவர்களின் சுயநிர்ணய உரிமையை, அதாவது அவர்களின் நிலம் மற்றும் அவர்களது நாட்டிற்கான உரிமையை எவராலும் பறிக்க முடியாது. பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த உரிமைக்காக நிபந்தனையின்றி முன் நிற்பேன்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியைக் காண அனைவரும் ஒன்றிணைந்து, பேச்சுவார்த்தை நடத்தி, ஒருமித்த கருத்தை எட்டுவதன் மூலம் மட்டுமே அதனை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

உலகளவில் பலஸ்தீன மக்களை ஒதுக்கி வைக்கவோ, ஓரங்கட்டவோ அல்லது ஒடுக்கவோ கூடாது என்பதற்கும், அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அனைவரும் உறுதியளிக்க வேண்டும். 

பலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் குண்டு வீச்சு மற்றும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இது தவறாகும் என்பதால், சுதந்திரமான நாட்டில் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க உலகளவில் அனைவரும் முன்வர வேண்டும்.

அதேபோல், ஒரு நாடாக இலங்கையும் பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எழுந்து நிற்க வேண்டும். இம்மக்களின் உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் நாம் குரல் கொடுக்க வேண்டும். இதன் பொருட்டு, இலங்கை நாடாளுமன்றமும் எந்த வித பேதங்களும் இல்லாமல் ஏகமானதாக தீர்மானங்களை நிறைவேற்றி, உறுதிப்பாட்டுடன் கொள்கைகளை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் எதிரொலிக்கும் சக்திவாய்ந்த குரலாக மாற வேண்டும்.

இறுதியாக, பலஸ்தீனியர்கள், பலஸ்தீன மத தளங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பலஸ்தீன சமூகத்தை அழிக்கும் நோக்கத்துடன் அம்மக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் என அனைத்தையும் நிறுத்துவதன் மூலம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொலை செய்யும் கொள்கைக்கு எதிராக முன்நிற்கிறேன். 

பலஸ்தீனமும் இஸ்ரேலும் அமைதியாக வாழ வேண்டும் என்ற பெரும்பான்மையானோரின் எதிர்பார்ப்பை நோக்கிய பயணத்துக்கு தலைமை வகிக்க இலங்கையும் தயார். இதற்காக எந்த பாகுபாடுகளும் இல்லாமல் ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment