
(செ.தேன்மொழி)
விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களின் அபிவிருத்திற்காக சேவை செய்ததற்காக தன்னை சிறையில் அடைத்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லாததனால், தொலைபேசியின் வெற்றியைக் கண்டு அஞ்சி, ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் இவர்களுக்கு மக்கள் தக்கபாடத்தை கற்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
களுத்துறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இன்று தொலைபேசியை சுற்றி பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த வெற்றியை பெற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.
எமது ஆட்சியில் கிராம இராச்சியம், நகரராச்சியம் செயற்திட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தியடையச் செய்வோம்.
தற்போதைய அரசாங்கம் ஒரு இலட்சம் அரச சேவையாளர்களின் தொழிலை பறிக்கவும், எஞ்சி இருப்பவர்களின் சம்பளத்தை அறவிடவும் திட்டமிட்டுள்ளது. இதற்காகவா அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்?
ஆட்சியை அமைத்தவுடனே இவர்கள் என்ன செய்தார்கள். ஓய்வூதிய கொடுப்பனவு, விசேட கொடுப்பனவு, இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட உணவு கொடுப்பனவு அனைத்தையும் இடைநிறுத்தினார்கள். பின்னர், வயோதிபர்களின் சேமிப்பு பணத்திலும் கைவைத்தார்கள். தற்போது வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.
பொதுமக்களிடம் பணம் இல்லை. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றார்கள். இதற்கான தீர்வு என்ன? மொட்டு அணியினர் அதனை கூட தெரிவிக்கவில்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், அரசாங்கம் ஒருவருடத்திற்கு எரி பொருளின் விலையை குறைப்பதில்லை என்ற தீர்மானம் எடுத்துள்ளது.
ஆனால், நான் ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருள் விலையை குறைப்பேன். மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணம் அறவிடமாட்டோம் என்றார்களே! அதனை செய்துள்ளார்களா? மின் கட்டணம் தற்போது வீடுகளுக்கு வந்துள்ளது அல்லவா? அதனை பார்க்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதா?
கடந்த காலத்தில் எவ்வாறு கேட்டார்கள் தற்போது நலமா என்று? ஆனால், அதுபோன்று நாங்கள் கேட்கமாட்டோம். எமது ஆட்சியில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தியவர்களின் பணத்தை மீள அவர்களுக்கே திருப்பி கொடுப்போம்.
நாளாந்தம் ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள், தோட்ட தொழிலாளர்கள், வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் சாதாரண மக்களுக்காக 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்பேன். இதுபோன்று பல்வேறு வேலைத்திட்டங்களை செய்ய எதிர்பார்த்துள்ளேன். ஆனால், இதற்கு மொட்டு அணினர் பாரிய எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.
எனது வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியாது என்கின்றனர். நான் பிரேமதாஸவின் மகன். 'ஜனசவிய' வேலைத்திட்டத்தை எனது தந்தையான ஆர்.பிரேமதாஸ முன்வைத்த போது, அதனை முன்னெடுக்க முடியாது என்று பலரும் கூறியிருந்தனர். ஆனால், எனது தந்தை அதனை செய்து காண்பித்தார். அதே போன்று அவரது புதல்வன் என்ற வகையில் நானும் செய்து காண்பிப்பேன். இதனால் என்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
நாங்கள் மின் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் போதும், எரிபொருள் விலையை குறைக்கும் போதும், இதனூடாக மக்களிடம் சேமிப்பு அதிகரிக்கும். அதற்கமைய வீழ்சியடைந்துள்ள பொருளாதாரம் மீள எழ ஆரம்பிக்கும்.
எமது செயற்பாடுகளுக்கு செயற்திறன் அற்ற அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பில் முதலில் நாங்களே தெரிவித்தோம். இதன்போது, சீனாவுடன் சீற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்றார்கள். முகக்கவசம் பற்றி பேசிய போது, அது அவசியமில்லை என்றார்கள். தற்போது என்ன கூறுகின்றார்கள். முகக்கவசம் இன்றி வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.
எம்மிடம் சிறந்த உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி உறுதியானதே. அதேபோன்று நாங்கள் வெற்றி பெற்று முதல் ஆறுமாத காலத்திற்குள் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப்பெற்றுக் கொடுப்போம்.
கடந்த கால ஆட்சியில் நான் கலாச்சார அமைச்சராக செயற்பட்டபோது, விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களின் வளர்ச்சிக்கான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தேன். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் போது, பாதிப்படைந்திருந்த தேவாலயங்களின் நிர்மானத்திற்கு நிதி வழங்கியிருந்தேன். கடற்படை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் மீள் கட்டுமானபணிகளை செய்திருந்தோம்.
தற்போதைய அரசாங்கம் இதன்போது நிதி மோசடி இடம்பெற்றதாக போலி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நான் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சரவையில் தேநீர் கூட அருந்தாத மனிதன். இவ்வாறான போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் மோசடிகாரர்களுக்கு மக்கள் தகுந்த பதிலினை வழங்குவார்கள் என்று எண்ணுகின்றேன். மதஸ்தலங்களுக்கும் விகாரைகளுக்கும் சேவை செய்ததற்காக என்னை சிறையில் வைத்தாலும் அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.
No comments:
Post a Comment