முஸ்லிம் சமூகம் இருப்பை பாதுகாத்து கொள்ள சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் - ராஜபக்ஷ குடும்பத்தின் முகவராகவே ஹிஸ்புல்லா களம் இறங்கியுள்ளார் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

முஸ்லிம் சமூகம் இருப்பை பாதுகாத்து கொள்ள சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் - ராஜபக்ஷ குடும்பத்தின் முகவராகவே ஹிஸ்புல்லா களம் இறங்கியுள்ளார்

முஸ்லிம் சமூகம் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பினை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை றஹ்மானியாபாத் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் எமது சமூகம் பட்ட அவலங்கள் ஏராளம். ராஜபக்ஷ அணியினர் எம்மீது கட்டவிழ்த்து விட்ட பல்வேறு விடயங்களால் நாம் பல்வேறு அவலங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. சுதந்திரமாக எமது கலாசார ஆடைகளை அணிய முடியாமல் போனது. நிம்மதியாக நடமாடக்கூட முடியாமல் எம்மை ஆக்கினார்கள்.

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நமது முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுத்தப்பட்டதனை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. 

பாராளுன்ற உறுப்பினர்களை கொலை செய்தார்கள், ஊடகவியலாளர்களைக் கொலை செய்தார்கள், எத்தனையோ பிரபலங்களை கொன்று குவித்தார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மஹிந்த ஆட்சியில் இடம்பெற்றபோது நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ செய்த விடயங்கள் நமது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட விடயங்களை நாம் இன்னும் மறந்து விடவில்லை.

பயங்கரவாதி சஹ்ரான் எவ்வாறு காத்தான்குடி மண்ணிலிருந்து உருவாகி முஸ்லிம் சமூகத்தினை காட்டிக் கொடுத்தாரோ அவ்வாறுதான் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஹிஸ்புல்லாவும் முஸ்லிம் சமூகத்தினைக் காட்டிக் கொடுப்பதற்காகவே இச்செயலில் இறங்கியுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் முகவராகவே ஹிஸ்புல்லா களம் இறங்கியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்துமே இவரது தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை நமது முஸ்லிம் சமூகம் அவதானத்துடன் இருந்து நமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஹிஸ்புல்லாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற விடயம் நமது முஸ்லிம் சமூகத்தினைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்து நிறைந்த விடயமாக பார்க்க வேண்டியுள்ளது. அவருக்கு அளிக்கப் போகும் வாக்கோடு இரண்டாவது தெரிவாக கோட்டாபயவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். 

முஸ்லிம் மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்குச் செல்லாமல் வேறு திசைக்கு திருப்பும் முயற்சிகளைத்தான் ஹிஸ்புல்லா செய்து கொண்டிருக்கின்றார் என்றார்.

அட்டாளைச்சேனை நிருபர்

No comments:

Post a Comment