முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளையோ பயங்கரவாதச் செயப்பாடுகளையோ அங்கீகரிப்பவர்களுமல்ல, ஆதரிப்பவர்களுமல்லர் முஸ்லிம்கள் அனைத்து இனத்தவர்களுடன் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழவே விரும்புகின்றனர். என அம்பாறை மாவட்ட பாராளுமன்றம் உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நசீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. பண்டார, பிரதேச பள்ளி வாசல் தலைவர்கள், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பொதுநிர்வாகம் முகாமைத்துவம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்புப் பாராளுமன்றம் உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதச் செயற்பாடுகள் குறித்து மிகுந்த வேதனையும் கவலையும் அடைகின்றேன். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டு பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் செயற்படுகின்றபோது சமூகத்தின் மீதான பாதுகாப்பை இலகுவான முறையில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஒவ்வொருவரும் வீண் பிரச்சினைகளிலிருந்தும், வதந்திகளை பரப்புகின்ற மற்றும் வதந்திகளை நம்பி ஏமாந்து செயற்படுகின்ற விடயங்களிலிருந்தும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இளைஞர்கள் கூடிக் கொண்டு குழுக்களாக நிற்கின்ற போது பல்வேறு பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. அவ்வாறான விடயங்களை தவிர்த்துக் கொள்வது பல்வேறு பிரச்சினைகளிலிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக அமையும்.
இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு பொதுமக்கள் தங்களது பாதுகாப்புக்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். எமது பிரதேசத்தினதும் எமது நாட்டினதும் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் வழங்குகின்ற ஒத்துழைப்புக்களே பெரிதும் துணை நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
எமது இயல்பு வாழ்க்கை எல்லாம் தற்போது சிதைந்திருக்கின்றன மீண்டும் எம்மத்தியில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுவதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை வாழ்மக்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட்டு நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைநிற்க உழைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment