நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், சம்மாந்துறை பிரதேச அனைத்து மக்களும் நாட்டின் சட்டத்தினை மதித்து பொலிஸாருக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைத் தொடர்ந்து சம்மாந்துறையின் முச்சபைகளான நம்பிக்கையாளர் சபை, ஜம்இயத்துல் உலாமா மற்றும் மஜ்லிஸ் அஷ்ஷீறா ஆகியவற்றின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட கூட்டம் சம்மாந்துறை ஹிஜ்ரா பத்ர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் பொதுமக்கள் எந்நேரமும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதனை பள்ளிவாசல்கள் ஊடாக அறிவுறுத்த வேண்டும். நாட்டு நடப்புக்கள் பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டும்.
சந்தேகத்திற்குரியவர்கள், சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மற்றும் பொதிகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எமது ஊரில் அண்மையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்கு கண்டு பிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து எமது ஊரின் நற்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நெருக்கடியான நிலையில் சட்டத்தை மதித்து செயற்படுவதில் பொது மக்கள் மிக உறுதியாக இருக்க வேண்டும். நாட்டில் அமைதியும், பாதுகாப்புமே இன்று முக்கியமாகவுள்ளது. இதற்கு அனைத்து மக்கள் பொறுப்புடனும், விழிப்புடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இன்று தீவிவாதக் கும்பலின் மிருகத்தனமான, வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களும் அச்சம் பீதிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி உயிர்களை காவுகொண்ட தீவிரவாதக் குழுக்களை பூண்டோடு அழிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
நாட்டின் இயல்பு நிலை இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்பத்துவதில் அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் சம்மாந்துறை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் தங்களின் மஹல்லவிலுள்ள பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
இந்நிகழ்வில் ஜம்இயத்துல் உலமாவின் தலைவர் மௌலவி வை.எம்.ஜலீல், மஜ்லிஸ் அஷ்ஷீராவின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், நாட்டில் அமைதி ஏற்படுத்த வேண்டி விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment