ரணிலின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை சட்டமா அதிபர், ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் : வரலாற்றில் முதன்முறையான பணிப்பாளர் பதவி ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது - அஜித் பி பெரேரா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 29, 2025

ரணிலின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை சட்டமா அதிபர், ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் : வரலாற்றில் முதன்முறையான பணிப்பாளர் பதவி ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது - அஜித் பி பெரேரா தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரத்தில் பொலிஸ் சுயாதீனமாக செயற்படவில்லை. நீதித்துறை சம்பிரதாயங்கள் மீறப்பட்டுள்ளன. அவை குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.

கொழும்பில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பொலிஸ் ஒரு நிறுவனமாக சுயாதீனப்படுத்தப்பட வேண்டியது குறித்து நாம் பல தசாப்தங்களாக பேசிக் கொண்டிருக்கின்றோம். அதற்காகவே பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் பொலிஸ் அதிகாரிகளும் சுயாதீனமாக செயற்பட வேண்டும். அவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழல் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

வரலாற்றில் முதன் முறையான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியொருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குறித்த பொலிஸ் அதிகாரிக்கான ஒப்பந்தம் வருடாந்தம் நீடிக்கப்பட வேண்டுமெனில் அவர் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை திருப்திப்படுத்தும் வகையிலேயே செயற்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பொலிஸின் சுயாதீனத்தன்மை இழக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

ஷானி அபேசேகர சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது இறுதி பதவி காலத்தில் எதிர்கொண்ட சில சம்பவங்களால் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு சாதாரண பிரஜையாக மாறியிருப்பது கவலைக்குரியது.இதன் காரணமாகவே பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மையும் இழக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள் நிறைவடைய முன்னரே அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விசாரணைகள் நிறைவு செய்யப்பட முன்னரே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இது ரணில் விக்கிரமசிங்க என்ற தனி நபருடன் தொடர்புடைய காரணியல்ல. நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் ஆகும்.

வசந்த சமரசிங்கவுக்கு ஒரு விதத்திலும், முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இன்னொரு விதத்திலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். பொலிஸ் ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும் என்றார்.

No comments:

Post a Comment