(எம்.மனோசித்ரா)
ரணில், சஜித், நாமல் இணைந்து இந்த சர்வாதிகார அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டிய சரியான நேரம் இதுவாகும். சிலிண்டருக்கான தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்ற இருவரில் ஒருவர் பதவி விலகி ரணிலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம். பிரிந்து சென்ற இரு கட்சிகளுக்கு மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எந்த வகையிலாவது ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சூழல் தானாக உருவாகியுள்ளது. சஜித் பிரேமதாசவுடன் எமக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் இன்று அவருடன் இணைந்து செயற்படுகின்றோம். இதுவே காலத்தின் தேவையாகும்.
ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் நிச்சயம் ஒன்றிணைய முடியும். கொள்கை ரீதியில் எமக்கு அது கடினம் என்றாலும் அவர்களால் இணைந்து பயணிக்க முடியும். நாமும் அதனையே வலியுறுத்துகின்றோம்.
நீதிமன்றத்தில் சில சட்டத்தரணிகளுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. யாருடைய ஆலோசனைக்கமைய பொலிஸார் அவ்வாறு செயற்பட்டனர் என்பது தெரியாது. நிறைவேற்றதிகாரத்தின் தேவைக்கேற்ப பொலிஸார் செயற்படக்கூடாது.
தற்போதைய அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதற்கெதிராக அனைவரும் இணைய வேண்டும். சிலிண்டர் சின்னத்துக்கு மக்கள் 20 இலட்சம் வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். அதன் பின்னர் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்துக்கு இரு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைத்துள்ளன.
ஜனநாயகவாதியான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டிய தகுந்த சந்தர்ப்பம் இதுவாகும். சிலிண்டருக்கான தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்ற இருவரில் ஒருவர் பதவி விலகி, ரணிலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நிச்சயம் குரல் கொடுப்போம். ரணில், சஜித், நாமல் இணைந்து இந்த சர்வாதிகார அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வேண்டும். என்றார்.
No comments:
Post a Comment