(இராஜதுரை ஹஷான்)
இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையில் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (04) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை மின்சார சபை சுதந்திர சேவை சங்கத்தின் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.
மின்சார சபை தொழிற்சங்கத்தினர் சட்டப்படி வேலை நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய மின்சார சபை சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையை 4 தனியார் நிறுவனங்களுக்கு வேறுபடுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
மின் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் 21 கோரிக்கையை மின்சாரத்துறை அமைச்சின் செயலாளரிடம் முன்வைத்துள்ளோம். இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
மின்சாரத்துறை கட்டமைப்பில் அரசாங்கம் எடுக்கும் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (4) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
எமது இந்த தீர்மானத்துக்கு ஆளுங்கட்சியின் தொழிற்சங்கங்களை தவிர்த்து ஏனைய தொழிற்சங்கத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளார்கள். எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சட்டப்படி வேலையில் ஈடுபடுவோம். அதற்கு பின்னர் சட்டப்படி வேலையில் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
இக்காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த தீர்மானத்தை மின்சாரத்துறை அமைச்சுக்கும், தொழில் அமைச்சுக்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment