அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இதனை நடைமுறைப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாடசாலை பஸ்கள், அலுவலக சேவைப் போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஏனைய பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு சுமார் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, சுமார் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப் பாட்டிகளின் விலை தற்போது 5,000 முதல் 7,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோர் சேவைகள் அதிகார சபையினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இது குறித்து அண்ணளவாக அனைவரும் தமது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அதனால் எதிர்காலத்தில் நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசேடமாக Citra Innovation Lab நிறுவனத்தின் ஊடாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பயணிகள், சாரதிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 2100 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது சம்பந்தமான அறிக்கையொன்றை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
அத்துடன், தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனங்கள் நுழையும்போது வாகன உதிரிப் பாகங்களின் தரத்தைப் பரிசோதித்து புள்ளிகள் வழங்கும் முறையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், வாகனங்களின் டயர்கள் தேவையான தரத்தில் இல்லாவிட்டால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனத்தை நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முச்சக்கர வண்டிகள், வேன்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்காக நலன்புரி நிதியமொன்றை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
நீண்ட தூர சேவை மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் நிறுத்துமிடம் தொடர்பான தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், புகையிரத சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், துறைமுகங்கள் தொடர்பான தேவையான நவீனமயமாக்குவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் இரண்டு உப குழுக்களை நியமிப்பதும், அவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதும் இதன்போது இடம்பெற்றது.
இதற்கு மேலதிகமாக, கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பது மற்றும் நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தனர்.
No comments:
Post a Comment