காசாவில் தொடரும் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதோடு இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த காசா மீதான முற்றுகையை சற்று தளர்த்திய நிலையில் மட்டுப்படுத்தப்பட்டு மனிதாபிதான உதவிகள் அங்கு சென்றடைந்துள்ளன.
இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் புதிய படை நடவடிக்கையை நிறுத்துவதற்கும் உதவி விநியோகங்களை அனுமதிப்பதற்கும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தபோதும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்வதோடு வடக்கு காசாவின் 14 பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற நேற்று புதிய உத்தரவுகளை பிறப்பித்தது.
நேற்று (22) காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய உக்கிர தாக்குதல்களில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தின் ஒன்பது பேர் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
வட மேற்கு காசாவில் அஸ் ஸப்தாவியின் பகித் குடும்ப வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஐவர் கொல்லப்பட்டாகவும் வபா கூறியது.
காசாவின் வடக்கு முனையின் பெயித் லஹியாவில் இஸ்ரேலிய டாங்கி ஒன்று அல் அவ்தா மருத்துவமனைக்குள் இருக்கும் மருந்து களஞ்சியம் ஒன்றின் மீது நடத்திய செல் தாக்குதலில் அந்தக் களஞ்சியம் தீப்பற்றி எரிந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தீயை அணைக்க மீட்பாளர்கள் போராடியதாக அந்த அமைப்பு குறி;ப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய டாங்கிகள் மருத்துவனைக்கு வெளியே நிலைகொண்டிருப்பதாகவும் அவை மருத்துவனையை அணுகுவதை முடக்கி வருவதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் ஒன்றரை ஆண்டுகளைத் தாண்டி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிககை 54 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்களில் குறைந்து 16,500 சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதில் ஒரு வயதுக்கு குறைவான 916 குழந்தைகளும் ஒன்று தொடக்கம் ஐந்து வயதுக்கு இடைப்பட்ட 4,365 சிறுவர்களும் ஆறு மற்றும் 12 வயதுக்கு இடைப்பட்ட 4,365 சிறுவர்களும் 13 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்ட 5,124 சிறுவர்களும் இருப்பதாக அந்த அமைச்சு கூறியது.
இந்த உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த வார ஆரம்பத்தில் இஸ்ரேல் காசாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் செல்ல அனுமதித்த நிலையில் உதவிகளை ஏற்றிய சுமார் 90 லொறிகள் காசாவை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மருந்துகள், கோதுமை மா மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை சுமந்த லொறிகள் காசாவுக்குள் நுழைந்ததாக ஐ.நா. மனிதாபிமான நிறுவனத்தின் பேச்சாளர் ஜேன்ஸ் லேர்க் குறிப்பிட்டுள்ளார். எனினும் பாதுகாப்பின்மை, கொள்ளையிடும் அச்சுறுத்தல் மற்றும் இஸ்ரேல் நிர்வாகத்துடனான் ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் காரணமாக உதவி விநியோகத்தில் உதவிக் குழுக்கள் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் அவசர மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்ய 87 உதவி லொறிகள் சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் கடந்த புதனன்று குறிப்பிட்டிருந்தது.
‘ரொட்டி தயாரிப்பதற்கான மா சில பேக்கரிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இன்று (22) பின்னேரம் ரொட்டி விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று பலஸ்தீன அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் பணிப்பாளரான அம்ஜாத் ஷவா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
90 லொறிகள் வந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், ‘போர் நிறுத்த காலத்தில் நாளாந்தம் 600 லொறிகள் வந்தன, அதன்படி தற்போதைய அளவு கடலில் ஒரு துளியைத் தவிர ஒன்றுமில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவுக்கான உதவி விநியோகங்களை இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கே பட்டினியால் அண்மைய நாட்களில் குறைந்தது 29 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ‘கடந்த சில நாட்களுக்குள் நாம் 29 சிறுவர்களை இழந்திருக்கிறோம்’ என்று பலஸ்தீன சுகாதார அமைச்சர் மாஜித் அபூ ரமதான் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவு பெறுவதற்கு பலஸ்தீனர்கள் வரிசைகளில் முண்டியத்து வருகின்றனர். காசாவில் உள்ள அரை மில்லியன் மக்கள் அல்லது ஐந்தில் ஒருவர் பட்டினியை எதிர்கொண்டிருப்பதாகவும் ஒட்டுமொத்த மக்களும் பஞ்ச அச்சுறுத்தலுக்கு முகம்கொடுப்பதாகவும் ஐ.நா. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
‘எனது குழந்தைகளுக்காக நான் வேதனைப்படுகிறேன்’ என்று காசா குடியிருப்பாளரான ஹொசைன் அபூ எய்தா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
‘எனது குழந்தைகள் தொடர்பில் இஸ்ரேலின் குண்டு வீச்சுகளை விடவும் பட்டினி மற்றும் நோய்களுக்காகவே அச்சமடைந்துள்ளேன்’ என்று அந்த பலஸ்தீனர் தெரிவித்தார்.
இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் சூழலில் அதன் மீதான சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில் மேற்குக் கரையில் இராஜதந்திரிகள் மீது இஸ்ரேலியப் படை எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்குக் கரையில் இஸ்ரேலின் படை நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் அழிவுகளைக் காணச் சென்ற இராஜதந்திரிகளை நோக்கியே கடந்த புதன்கிழமை இந்த எச்சரிக்கை வேட்டுகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த இராஜதந்திரிகள் தடுக்கப்பட்ட வலயம் ஒன்றுக்குள் நுழைந்ததை அடுத்தே சூடு நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் விளக்கியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல நாடுகளும் கண்டனம் வெளியிட்டிருப்பதோடு பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் உருகுவே நாடுகள் இஸ்ரேலிய தூதுவர்களை அழைத்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.இதனிடையே இஸ்ரேல் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
யெமனில் இருந்து வந்த இரு ஏவுகணைகளை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
பென்கூரியன் விமானநிலையத்தை இலக்கு வைத்து இரு பலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகவும் டெல் அவிவிவை இலக்கு வைத்து இரு ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதாகவும் யெமனின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் யஹ்யா சாரீ குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment