நாட்டில், புதிய கொவிட்-19 திரிபு பரவும் அபாயம் இல்லாததால், பயம் கொள்ளத் தேவையில்லையென சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில், தற்போது ஒரு புதிய கொவிட்-19 திரிபு பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ள நிலையில், தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளுக்கமைய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் நாட்டில் கொவிட் தொற்று பரவும் அபாயம் இல்லாததால் அச்சம் கொள்ள அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பல ஆசிய நாடுகளில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் தயார்படுத்தவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் கொவிட்-19 க்கான வைத்திய மாதிரிகளை சோதிக்கும் ஒருங்கிணைந்த சுவாச கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இலங்கையில் தொற்றுநோய் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண தேவையான ஆய்வக கண்காணிப்பு அமைப்பும் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
ஏனைய சுவாச நோய்களைப் போலவே, அவ்வப்போது கொவிட்-19 தொற்றும் அதிகரிக்கக்கூடும்.
வயதானவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு உள்ளவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளமையினால், விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளுக்கமைய, அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். அதாவதி, அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்க சுகாதார அமைச்சகம் தயாராகவுள்ளதுடன், தொற்றுநோய் சூழ்நிலைகளை சமாளிக்க வைத்தியசாலைகளும் தயாராகவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment