இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்திய 02 பல நாள் மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளின் 600 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர், அரச புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பிராந்திய செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப் பொருட்களை கொண்டு சென்ற இரண்டு உள்ளூர் பல நாள் மீன்பிடி படகுகளுடன் குறித்த 11 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த, பல நாள் மீன்பிடி படகுகள் தற்போது திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று (28) பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், குறித்த போதைப் பொருட்கள் ஹெரோயின் மற்றும் ஐஸ் என்பது உறுதி செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்தபடி, போதைப்பொருட்களின் அளவு சுமார் 600 கிலோகிராம்களுக்கு அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் போதைப்பொருள் கையிருப்பை பார்வையிட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், போதைப் பொருள் இல்லாத நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் எண்ணக்கருவிற்கு அமைய, போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகள் முப்படைகள், பொலிஸ், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் மற்றும் அனைத்து சட்ட அமுலாக்க தரப்பினருடனும் இணைந்து நாட்டிற்குள் போதைப் பொருள் இறக்குமதியைத் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் தடுக்கும் திட்டத்துடன் தொடரும் என்றும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கையிருப்பின் சரியான நிறை தற்போது கணக்கிடப்பட்டு வருவதுடன், போதைப் பொருள் கையிருப்பு மற்றும் பல நாள் மீன்பிடி படகுகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment