மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
“மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கான திட்டம்” என்ற தலைப்பில் நேற்று (27) கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற ‘Period Pride 2025’ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ”பெண்களின் மாதவிடாய் என்பது அவமதிக்கப்படக்கூடிய ஒரு விடயமல்ல என்றும், இது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் வறுமை ஆகியவை வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்லாது, கண்ணியம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயமாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய ஆராய்ச்சியின்படி, பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் இல்லாததால் பல பாடசாலை மாணவிகள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது என்றும், பல பெண்கள் பாதுகாப்பற்ற தெரிவுகளை நாடுகின்றனர் என்றும், இது மிகவும் ஆபத்தானதாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியம் தொடர்பில் சமூகத்திலிருந்து எழும் களங்கம் காரணமாக பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள், இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் மாதவிடாய் எவருடைய உடல்நலம், கல்வி அல்லது கண்ணியத்திற்கும் இடையூறாக அமையக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு விரைவான மற்றும் முறையான திட்டம் ஒன்று தேவை என்றும் பிரதமர் கூறினார்.
13 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தை கல்வி அமைச்சு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியதுடன், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மாதவிடாய் காரணமாக எந்த ஒரு பெண் பிள்ளையும் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதார நப்கின்களை வழங்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கான சுகாதார நாப்கின் மீதான அனைத்து வரிகளையும் நீக்க கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்றும் இந்த விடயத்தில் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு விரிவான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக நிதியமைச்சுடன் கலந்துரையாடி வரியினை நீக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதர்பார்ப்பதாகவும், இதற்காக சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும்” பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ரெமி லம்பேர்ட், இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment