வட பகுதி எங்கும் விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாத போதைப் பொருட்கள் தற்போது பன்மடங்கு பெருகிக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறு பெருகிக்காணப்படும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச ஆபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 30.01.2025 இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் பாவனைகள் அதிகரித்திருப்பதாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்டபட வட பகுதி எங்கும் போதைப் பொருட்கள் பெருகிக் காணப்படுகின்றன.
போதைப் பொருட்கள் என்னும்போது கசிப்பு, கஞ்சா என்பவற்றைத் தாண்டியும் இன்னும் புதுவிதமான பல போதைப் பொருட்கள் எமது பகுதிகளில் பெருகி வருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான போதைப் பொருட்கள் எவையும் இல்லை. ஆனால் தற்போது எமது பகுதிகளில் போதைப் பொருள் பல மடங்கு பெருகிக் காணப்படுகின்றன.
யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு, கடந்த கால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப் பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர்.
தற்போதும் பெரியோர் முதல் இளையோர் வரை போதைப் பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய அரச தரப்பு பிரதிநிதிகளிடம் எமது பகுதிகளில் பெருகிக்கிடக்கின்ற இந்த போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.
எனவே தற்போதைய அரசு இந்த போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கூமென நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment